வீட்டு வாடகை கேட்டு ஓனர் துரத்திட்டாங்க! லாக்டவுனில் 3 குழந்தைகள், மனைவியுடன் நடுத்தெருவுக்கு வந்த கணவன்..! கரூர் பரிதாபம்!

வீட்டு வாடகையை செலுத்தாததால் வீட்டு உரிமையாளர் சாவியை பிடுங்கி கொண்டு வெளியேற்றியதாக கலெக்டர் அலுவலகத்தில் குடும்பம் ஒன்று மனு அளிக்க வந்த சம்பவமானது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கரூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் மன்றம் கொரோனா காரணமாக  நேற்று செயல்படவில்லை. அதற்கு பதிலாக மனுக்களை பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மனு போட வருபவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மக்கள் ஒன்று திரண்டு வந்து மனுக்களை பெட்டிகளில் போடுவதற்கு வந்தனர்.

அவ்வாறு கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாந்தோனிமலைக்கு அருகே அமைந்துள்ள சிவசக்தி நகர் கிழக்கு பகுதியில் தர்ம ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் லோகேஸ்வரி. இவர்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அவர்கள் மனுவில், "கொரோனா ஊரடங்கினால் மார்ச் மாதத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றோம். 16-ஆம் தேதியன்று எங்களுடைய வீட்டிற்கு திரும்பிய போது, வாடகை கொடுத்தால் மட்டுமே வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி தரப்படும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

இதனால் கடந்த ஒரு வார காலமாக நாங்கள் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு உறவினரின் வீட்டில் தங்கி வந்தோம். இந்நிலையில் வாடகை பணத்தை செலுத்துவதற்காக 2 மாத காலம் அவகாசம் தேவை என்றும், மீண்டும் எங்களை வீட்டிற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். மறுக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழியில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இன்னும் பலர், மகளிர் சுய உதவி குழுவிடம் வங்கிகள் மாதத்தவணை பணத்தை மாதந்தோறும் கட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர். தயவுசெய்து இதனை தவிர்க்க வேண்டும் என்று பலரும்  கூறியுள்ளனர். இந்த சம்பவமானது கரூர் மாவட்ட அலுவலகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.