அம்புப் படுக்கையில் பீஷ்மர் ஏன் அவஸ்தைப்பட்டார் தெரியுமா? காரணம் இவைதான்!

ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி.


ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ”பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு” என்று கேட்க, ” இரு கொண்டுவருகிறேன்” என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .

ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்” என கோபித்து சாபமிட்டான். பிராமணனிரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, ”நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த வருடம் 01.02.2020 சனிக்கிழமை ரத சப்தமி. அன்று பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் நடைபெறும். அதை தரிசித்தால் முன்னோர்கள் திருப்தியடைவர். திருப்பதி திருமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிக விசேஷம். இன்று நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு நெய்விளக்கு வைத்துவர சூரிய தோஷம் விலகும்.

பீஷ்மருக்கு விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என வரமிருந்தது. ஆனால் அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லையே ஏன்? மனதுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் பீஷ்மர். அப்போது அங்கே வந்தார் வேத வியாசர்.

வியாசரைக் கண்டதும் அவரிடம் பீஷ்மர், ”நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பியபடி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருந்தினார். அதற்கு வியாசர், ”பீஷ்மா, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்குத் தீமை, அநீதிகளை செய்வது மட்டுமல்ல, செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும்கூட பாவம்தான். அதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும்.

அந்த வகையில்தான் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடல் அளவில் அவஸ்தைப்பட்டாலும், அதை விட உள்ளம் படாத பாடுபடும். அந்த வேதனையே பெரும் தண்டனைதான்” என்றார். பீஷமருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை.

அந்த அவையில் பீஷ்மரும் இருந்தார். ஒரு மாபெரும் அநியாயம் நடந்தும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும், அதைத் தடுக்காமல் போனதன் காரணமாகத்தான் இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவிப்பதை உணர்ந்தார் பீஷ்மர். வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், ”இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டார். ”யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது.

எனவே, பீஷ்மா, நீ எப்போது உன்னுடைய பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது உன்னிடமிருந்து அகன்றுவிட்டது. இருந்தாலும் திரவுபதி “கண்ணா, என்னைக் காப்பாற்றமாட்டாயா என்று துரியோதனன் அவையில் கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வையிருந்தும் பார்த்தும் பாராததுபோல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக்கேட்காத உன் வாய், உன்னிடமிருந்த அளப்பரிய தோள் வலிமையை சரியான நேரத்தில் உபயோகிக்காமலிருந்த உன் வலுவான தோள்கள்,

வாளையெடுத்து எச்சரிக்கைவிடாத உன் உறுதியான இரு கைகள், ஆரோக்கியமுடன் அமர்ந்திருந்தபோது இருக்கையிலிருந்து எழாமல் இருந்த உன் இரு கால்கள், நல்லது எது? கெட்டது எது என்று யோசிக்காத உன் புத்தி இருக்கும் இடமான உன் தலை ஆகியவற்றுக்கும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் என்பது விதி” என்றார்.

”அப்படியென்றால் என்னுடைய இந்த அங்கங்களையும் பொசுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியன்தான். சாதாரண அக்னியின் சூடு போதாது. என் அங்கங்களைத் தீய்க்க சூரியசக்தியைப் பிழிந்து தாருங்கள்” என்று தன்னிலை உணர்ந்து வேதவியாசரிடம் வேண்டினார் பீஷ்மர்.

பீஷ்மர் உடனே வேதவியாசர் முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, ”பீஷ்மா, இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன்.

அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்றவர், அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார். பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்துவிட்டாரே, அவருக்கு யார் பித்ருக் கடன் செய்வது?’ என்று தர்மர் வருந்தினார். தர்மருடைய வருத்தத்தைத் தெரிந்துகொண்ட வியாசர், ”தர்மரே வருந்த வேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் என்பது அவசியமே இல்லை.

அவர்கள் மேம்பட்ட ஓர் உயர்நிலைக்குப் போய்விடுகிறார்கள். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள்தான் பாவிகள். ஆனால் பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வார்கள். அதோடு பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும்” என்று வியாசர் கூறினார்.

எனவே ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரத சப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.