காஞ்சி காமாட்சி உருவான வரலாறு – காஞ்சி புராணம் கூறும் கருத்து என்ன?

ஸர்வ மார்க்கங்களும் இறுதியில் ஒடுங்குவது ஶ்ரீவித்யையில்தான். சாக்தத்தை விட உயர்ந்ததே ஶ்ரீவித்யை.


நவாவரணங்களில் சாக்த தர்சனத்திற்கு அதிதேவதையான புவனேச்வரியாக ஏழாவது ஆவரணத்தில் பூஜையுண்டு. ஆக, ஶ்ரீவித்யை அனைத்தினும் மேம்பட்டது. ஶ்ரீவித்யைக்கு அதிஷ்டான க்ஷேத்ரமான காஞ்சிபுரத்தில் உறையும் காமாக்ஷியம்மையைப் பற்றி "காஞ்சி புராணம்" எங்ஙனம் கூறுகிறது என சிந்திப்போம்.

ஸ்காந்த மஹாபுராணத்தில் கூறப்பட்ட காஞ்சி க்ஷேத்ர மாஹாத்ம்யத்தை ஒட்டி இயற்றப்பட்டதே "காஞ்சி புராணம்". ஏகாம்ரத்தின் மஹத்வம், காமாக்ஷி தேவி தோற்றம் என பல அத்புத சரித்ரங்களைக் கொண்டது.

ஆதியில் ப்ரளயத்திலுமழியாத ஒற்றை மாமரம் மட்டுமே இருந்தது. அதன் அடியில் ஜ்யோதிவடிவான நிர்குண ப்ரஹ்மம் ஜ்வலித்துக்கொண்டிருந்தது. அந்த ஜ்யோதி வடிவம் பின் மானையும், மழுவையும் மேலிரு கரங்கள் தாங்கி, வராபயத்தை கீழிரு கரங்கள் ஏந்தி, கறுத்த கழுத்துடையதாய், ஸ்படிகம் போன்ற மேனி நிறமுடையதாய் ஒரு வடிவம் தாங்கியது.

அவரே சூதநாதனாம். அவரது இடது பாகத்திலிருந்து சிவந்த நிறமுடையதாய், மிகவும் அழிகியவளாய், மென்தோளியாய் ஒரு பெண் தோன்றினாள். அவளே "இலளிதா", அங்ஙனம் தோன்றிய "இலளிதா" அம்மையார் பரமசிவனை நமஸ்கரித்தாள். சங்கரனோ "ஓ!! லலிதே!! பண்டாசுரனின் பொருட்டு உன்னால் பஸ்பமாக்கப்பட்ட ஈரேழு புவனங்களையும், திரிமூர்த்திகளையும் மீளவும் ச்ருஷ்ட்டிப்பாய்!!" என ஆணையிட்டனர்.

அந்த "இலளிதா" அம்மையார், பின் பரமனாரின் ஆணைக்கினங்க ஒரு நொடியில் ஈரேழுலுலகங்களையும் உண்டாக்கினர். தனது வலக்கண்ணால் பிரமனையும், இடக்கண்ணால் விஷ்ணுவையும், நெற்றிக்கண்ணால் ருத்திரனையும் உண்டாக்கினர். அந்த "இலளிதா" அம்மைக்கு அதனால் "காமக்கண்ணி" "காமாக்ஷி" எனும் பெயர் உண்டாயிற்று. க -- பிரமன், ஆ -- விஷ்ணு, ம -- ருத்திரன், மூவரையும் நேத்ரத்தில் உண்டாக்கின லலிதாம்பிகையே காமாக்ஷி.

பின்னர் திரிமூர்த்திகள் மூவரும் ஏகாம்ரநாதனை நமஸ்கரித்து, ஓ!! பரமாத்துமாவே!! தாங்கள் எங்கள் பொருட்டு நிர்குணராய் இல்லாது, ஸகுணராய் லிங்கத்தில் காக்ஷியளிக்க வேண்டும். அதைப்போல் இந்த காமக்கண்ணி அம்மையாரும், மஹாபிலத்தின் த்வாரத்தில் உலக நன்மை பொருட்டு கோவில் கொள்ள வேண்டும்!! அருள்வீர்!! என ப்ரார்தித்தனர்.

அங்ஙனம் சூதவ்ருக்ஷத்தினருகில் லிங்காகாரமாய் ஏகாம்ரநாதனும், அவனது வல்லபையான காமாக்ஷி தேவி பிலாகாசமாக பிலத்வாரத்திலுமுறைந்தனர். மேலும் இக்காமக்கண்ணியாரின் மேல் தக்ஷப்ரஜாபதி அதீதமான பக்தி கொண்டு இவளை தோத்தரிக்க, மகிழ்ந்த காமாக்ஷி அவனுக்கு புதல்வியானாள். அவளே தாக்ஷாயணீ!!

பின் சிவாபராதியான இவள் பெண் என்பதை மாற்றவேணும் என பர்வதராஜனுக்கு பெண் ஆனாள். இவளே பார்வதீ. அதீதமாய் தவமியற்றி பரமசிவனை மணம் செய்து கொண்டு ஊடலின் காரணத்தினால் திரிநேத்ரங்களை மூடினாள். பின் பதரிகாச்ரமத்தில் காத்யாயனரின் பெண் ஆனாள். இவளே காத்யாயனீ. பின் காசியில் அன்னபூரணீ. பின்னர் காஞ்சியில் ஒற்றை மாமரத்தினருகில் கம்பைக்கரையில் மணலால் லிங்கம் பிடித்து இறைவனை பூஜித்து அவனுடன் கலந்தாள்.

இதுவே காஞ்சிபுராண சுருக்கமாம்.