திருவிடைக்கழி இரண்ய சம்ஹாரர் – மகர மீனாக வடிவெடுத்த இரண்யன்!

நாம் காணும் பொருள்களில் பரந்து விரிந்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தி அதிசயப்பட வைப்பது கடல். கடலில் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன.


நாம் காற்று கிடையில் வாழ்வது போல் கடலுக்குள் எண்ணற்ற உயிர்கள் நீரின் இடையில் வாழ்கின்றன. அப்படி வாழும் உயிர்களில் மகரமீன் என்பதும் ஒன்றாகும். அது வலிமையும் சாதுர்யமும் நிறைந்ததாகும். பல சமயங்களில் தேவர்களும், அசுரர்களும் மீன் வடிவம் கொண்டு கடலுக்கடியில் திரிந்ததைப் புராணங்கள் கூறுகின்றன.

சோமுகன் என்பவன் பிரம்மனிடமிருந்து வேதங்களை திருடிக் கொண்டு கடலுக்கடியில் சென்று மீன் வடிவில் திரிந்ததையும், திருமால் அவனைவிடப் பெரிய மீனாக அவதாரம் கொண்டு அவனைத் தேடிச் சென்று கொன்று வேதங்களை மீட்டதையும் காண்கிறோம். அவருடைய அந்த அவதாரம் மச்சாவதாரம் என்று அழைக்கப்படுகிறது.

நந்தி சிவபெருமானுடைய சாபத்தால் மீனாகித் திரிந்ததையும், சிவபெருமான் பெரிய வலையை ஏந்திய வேட்டுவ மீனவனாகச் சென்று அவரைப் பிடித்துசாபவிமோசனம் செய்ததையும் திருவிளையாடற்புராணம் கூறுகிறது.சூரபத்மனின் மகன் இரண்யன். இவன் சூரனாதியர் வதத்திற்குப் பிறகு முருகனுக்கு அஞ்சிக் கடலில் வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் புதிய தெம்பு வரப்பெற்றான். அவனுக்கு அசுரனுக்குரிய இயல்பான குணங்கள் தோன்றின. அதனால் மீண்டும் பெருஞ்சேனையைச் சேர்த்தான். அதைக் கண்டு அசுரர்கள் மனம் களித்தனர். அவனுக்குப் பின்னால் அணி திரண்டனர்.

தங்கள் இயல்பான குணத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் மக்களுக்கும் தேவர்களும் தொல்லை கொடுக்கத் தொடங்கினர். அவனுடைய கொடுமைகளைக் கண்டு அஞ்சிய தேவர்கள் முருகனைச் சரணடைந்து தம்மைக் காக்குமாறு வேண்டினர். முருகன் நெடிய வில்லையும் அம்பையும் ஏந்தி, கடற்கரையை அடைந்தான். அதைக் கேட்டு கோபித்த இரண்யன் பெரிய மகர மீனாக வடிவம் கொண்டு கடல் அலைகளுக்கு மேலே தோன்றினான். அவனது பேருருவைக் கண்டு எல்லோரும் அஞ்சினர். அவனது கண்களில் இருந்து தீயெழுந்தது. அது வடவைத் தீபோல கனன்று அனல் வீசியது.

முருகன் கோபம் கொண்டு வில்லை நாணேற்றி தனது அத்திரத்தை அவன் மீது செலுத்தினான். அந்த அத்திரம் இமைப்பளவில் அவனது ஆணவத்தினை அழித்தது. அவனது ஆன்மா தெளிவு பெற்றதால் அவன் மகர வடிவுடன் அவரைப் பணிந்தான். அவனை முருகன் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.

மகர வாகனத்தில் பவனி வரும் முருகன் காங்கேயன் என்று அழைக்கப்படுகின்றான். அவன் நீலோற்பல மலர். தீயகல் (தீப்பந்தம்) பூரண கும்பம் ஏந்தியவனாக விளங்குகின்றான். செல்வச் செழிப்பு உண்டாகவும் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், காங்கேயனை வழிபடுகின்றனர்.

கங்கு என்பது சிறிய ஜ்வாலைகளுடன் கனற்று கொண்டிருக்கும் பெருந்தீயாகும். கடலுக்கு அடியில் உலகத்தை ஒருநொடியில் அழிக்கச் செய்யும் ஆற்றலை உடையதும், குதிரை முகத்துடன் இருப்பதால் வடவைக்கனல் என அழைக்கப்படுவதுமான பெருந்தீ கடலுக்கு அடியில் அடங்கிய நிலையில் உள்ளது.அத்தீயை எளிய தீப்பந்தமாக ஏந்தியிருக்கும் ஆற்றல் கொண்டவனாக விளங்குவதால் முருகன் காங்கேயன் எனப்பட்டான். கங்கையின் மைந்தனாக இருப்பதாலும் அவனுக்குக் காங்கேயன் என்பதுபெயராயிற்று.

இரண்யனைச் சம்ஹரித்தால் முருகன் இரண்ய சம்ஹாரர் என்று அழைக்கப்படுகின்றார். திருவிடைக்கழி என்னும் தலத்தில் முருகன் இரண்ய சம்ஹாரர் என்னும் பெயரில் நெடிய வடிவுடன் எழுந்தருளியுள்ளார். வில்லேந்திய வேடுவனாக விளங்கும் பெருமான் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். அருகில் தெய்வயானை நிற்கின்றாள்.

இரண்யனை வென்று ஆண்டு கொண்ட பின் முருகன் வெற்றி நடனம் புரிந்தான். அதையொட்டி இவரை நடன மூர்த்தி என்றும் கூறுகின்றனர். திருவாதிரையில் இவருக்குச் சிறப்பு விழா கொண்டாடப்படுகின்றது.