ஹஃபிங்டன் போஸ்ட் இதழ் காஷ்மீரில் நடக்கும் நிலவரங்கள் குறித்து அறிவித்து வருகிறது.
காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய ஷெஹ்லா மீது வழக்கு..? அதிரடி அரசு!

காஷ்மீரில் சிறப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின், தெருக்கள் தோறும் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல்களைச் செய்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
அங்கே சென்று வந்த உண்மையறியும் குழு, சிறுவர்களையும்கூட இராணுவப் படையினர் கைது செய்வதாகக் குற்றம்சாட்டியது. காஷ்மீர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஷெஹ்லா ரஷீத் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார்.
‘ஆயுதமேந்திய படைகள் இரவில் வீட்டிற்குள் நுழைந்து, சிறுவர்களை அழைத்துச் செல்கிறது. வீட்டை நாசம் செய்கிறது. உணவுப் பொருட்களை வேண்டுமென்றே கீழே சிந்தி, அரிசியுடன் எண்ணெயை கலப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. சாபியனின் இராணுவ கேம்புக்கு அழைக்கப்பட்ட நான்கு பேர் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அவர்கள் அலறுவதை அந்தப் பகுதி முழுவதும் பரப்பும் வகையில் அருகே மைக்கை பொருத்தியிருக்கிறார்கள். இது அந்த முழு பகுதியையும் அச்சமடைய வைத்தது’ என்றும் காஷ்மீர் நிலைமை குறித்து அவர் டிவிட்டரில் எழுதியிருந்தார்.
ஷெஹ்லா ரஷீத்தின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக ராணுவம் மறுப்பு தெரிவித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அறிக்கை கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அலாக் அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் ஷெஹ்லா ரஷீத் மீது குற்ற வழக்கு பதிந்துள்ளார்.
காஷ்மீரின் அரசியல்வாதிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் 12 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கக்கூடிய பொது பாதுகாப்பு சட்டத்தில் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். 4000 பேர் இதுவரை கைதாகியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி கூறுகிறது.