திலீபன் வழியில் அறப்போரில் மரணித்த ஹெலின் போலக்.

காந்தியின் அறப்போராட்டம் வெல்வது கடினம், அதுவும் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரி நாட்டை ஆளும்போது, இந்த போராட்டங்களுக்கு மதிப்பு இருப்பதில்லை. ஆனாலும், ஆளும் கட்சிக்கு எதிராக அறப் போராட்டம் நடத்தி உயிரை இழந்திருக்கிரார் இசைக் கலைஞர் ஹெலின் போலக்.


துருக்கியைச் சேர்ந்த 28 வயதே ஆன இளம் இசைக்கலைஞர் ஹெலின் போலக் [Helin Bolak] துருக்கி அரசுக்கெதிராக கடந்த 288 நாளாக தொடுத்துவந்த பட்டினிப்போரில் வீர மரணம் அடைந்திருக்கிறார். தான் பங்கு பெற்ற பிரபலமான 'யோரும்' இசைக்குழுவிற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கக்கோரியும் சிறைப்பிடிக்கப்பட்ட தனது சக கலைஞர்கள் ஏழு பேரை விடுவிக்குமாறும் துருக்கியின் சர்வாதிகார எர்டோகன் அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்தார்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, 288 நாட்களாக தீரத்தோடு அவர் நடத்திய உண்ணா நிலை அறப்போர் அவரது உயிரைக்குடித்துவிட்டது. ஆம், அவர் உயிர் அடங்கிவிட்டது, ஆனால், அவர் வைத்த கோரிக்கைகள் இன்னமும் அப்படியே உள்ளன. பட்டினிப்போரின் முன்னும் பின்னும் அவர் எப்படி இருக்கிறார் என்பதைப் பார்த்தாலே, அவரது போராட்டம் புரிய வரும். கலையின் குரல்வளையினை நெறிக்கும் துருக்கிய எர்டோகன் அரசுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம் என்கிறார் தோழர் பிரளயன்.