ஒரே இரவில் 19 பேரை வெட்டி வீழ்த்தி கொடூர கொலை செய்த இளைஞன்..! அதற்கு அவன் கூறிய பகீர் காரணம்!

மாற்றுத்திறனாளிகள் உலகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறி 19 முதியவர் மாற்றுத்திறனாளிகளை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவமானது ஜப்பான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜப்பான் நாட்டில் சுக்குய் லில்லி கார்டன் என்ற ஊனமுற்றவர்களுக்கான முதியோர் இல்லம் இயங்கி வந்தது. இங்கு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்னர் சதோஷி உமாத்சு என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். பணியாற்ற தொடங்கியதிலிருந்தே இவருக்கு ஊனமுற்றவர்கள் மீது வெறுப்பு வந்துள்ளது. ஆதலால் தன்னுடைய பணியை 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார்.

தான் ராஜினாமா செய்த சில நாட்களில் ஜப்பான் நாட்டு மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "மாற்றுத்திறனாளிகள் இந்த உலகத்திற்கு பாரமானவர்கள். ஆகையால் அவர்களை கருணை கொலை செய்திட வேண்டும். இந்த கருணை கொலையையும் நானே முன்னின்று செய்கின்றேன்" என்று எழுதியிருந்தார். 

இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் அவரை கைது செய்து 2 வாரங்களுக்கு உளவியல் ரீதியிலான சிகிச்சைகளை அளித்துள்ளனர். அதன் பின்னர் மார்ச் மாத நடுவில் அவர் உளவியல் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

146 நாட்கள் கழித்து, ஜூலை மாதத்தில் நள்ளிரவு ஒன்றில் அவர் தான் பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு அனுமதியின்றி நுழைந்துள்ளார். அப்போது அங்கு 149 மாற்றுத்திறனாளிகள், மற்றும் 9 ஊழியர்கள் உறங்கி கொண்டிருந்தனர். தூக்கத்தில் இருந்த முதியவர்களை கூர்மையான கத்தி கொண்டு கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். தாக்குதலில் 19 மாற்றுத்திறனாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் குறித்து காப்பகத்திலிருந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதிகாலை 3 மணியளவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் சதோஷி உமாத்சு அங்கிருந்து தப்பிவிட்டார். நள்ளிரவு முழுவதையும் கழித்த பின்னர் சதோஷி உமாத்சு சாகமிஹாரா பகுதி காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையின் போது, "மாற்றுத்திறனாளிகள் என்றென்றும் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள். ஆதலால் ஹிட்லர் முறையைப் பின்பற்றி அவர்களை கருணை கொலை செய்தேன். என்னுடைய மேல்முறையீடு வாய்ப்பையும் நான் நிராகரிக்கிறேன். நான் செய்ததில் எந்தவித தவறுமில்லை" என்று கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இந்த சம்பவமானது ஜப்பான் நாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.