தமிழகத்தில் 4 எம்பி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! ஹெச். ராஜா போடும் அரசியல் குண்டு!

தூத்துக்குடி, சிவகங்கை, மத்திய சென்னை, நீலகிரி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்று எச்.ராஜா ஆருடம் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். அதேசமயம், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை தோல்வி அடைந்தார். இந்நிலையில், கனிமொழி வெற்றியை எதிர்த்து, தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் கனிமொழி செயல்பட்டார். ஆனால், அவரை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அத்துடன், அவரது வேட்புமனுவில் பலவித குறைகள் இருந்தும், அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். எனவே, இதுபற்றி விசாரணை நடத்தி அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டுமென தமிழிசை கூறியிருந்தார். 

இந்நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, தமிழகத்தில் மத்திய சென்னை,  சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி ஆகிய 4 மக்களவை தொகுதிகளில் சிலர் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளனர். அவர்களது வெற்றி நிரந்தரமானதல்ல. விரைவில் அது ரத்து செய்யப்பட்டு, இந்த 4 தொகுதிகளுக்கும் மறு தேர்தல் வரும், எனக் குறிப்பிட்டார். 

எச்.ராஜாவின் பேச்சு, தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிடும் 4 மக்களவைத் தொகுதிகளில், கனிமொழி, ஆ.ராசா, தயா நிதி மாறன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் போட்டியிட்டு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.