கையில் நீண்ட இரண்டு கம்புகள்..! ஒன்றில் டிரிம்மர்..! இன்னொன்றில் சீப்பு! கொரனா பீதியால் சலூனில் அரங்கேறிய பரிதாபம்!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக சீனாவிலுள்ள சலூன் ஒன்றில் புதுவித பாணியில் முடிவெட்டும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


உலகில் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தும் விதமாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான மருந்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

இதனால் சீனாவில் உள்ள மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்வதில் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொள்ளுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பொதுமக்களுக்கு பலவித அறிவுரைகளும் கூறப்பட்டுள்ளது . அதில் கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல் , முத்தம் பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது . இதன் மூலம் வைரஸ் தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள இயலும் என சீன நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சீனாவிலுள்ள சலூன் ஒன்றில் வேலை பார்க்கும் ஒருவர் ஒரு படி மேலே சென்று வித்தியாசமான பாணியில் முடி வெட்டும் வேலையை செய்திருக்கிறார். அதாவது நீண்ட நீளமான இரண்டு கொம்புகளில் ஒரு பக்கம் ட்ரிம்மரை இணைத்தும் மற்றொரு பக்கம் சீப்பை இணைத்தும் அதன்மூலம் வாடிக்கையாளருக்கு முடி வெட்டுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இது அங்கு வரும் வாடிக்கையாளர்களை பெரிதும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது என்னதான் மாஸ்க் அணிந்து இருந்தாலும் வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது . ஆகையால் தான் இம்மாதிரியான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவானது சீன வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.