மாசம் 1000 ரூபாய்..! ரெண்டுவாட்டி போன்ல பேசுறேன்..! ஆதரவில்லாமலும் உழைத்து சாப்பிட்ட காமாட்சி பாட்டியை நெகிழ வைத்த அமெரிக்க பெண்! என்ன தெரியுமா?

கரூர் மாவட்டத்தை சேர்ந்த வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவருக்கு, அமெரிக்காவில் பணியாற்றிவரும் பெண் பொறியாளர் ஒருவர் மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்பி உதவி செய்துவரும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டம், புகளூர் ஒன்றியத்தில் தோட்டக்குறிச்சி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு மக்கிப் போய் சிதிலமடைந்த ஒரு வீட்டில் வசித்து வருபவர் வயது முதிர்ந்த மூதாட்டி காமாட்சி. இவரது கணவர் பெயர் மருதன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் மறைந்துவிட்டார். காமாட்சி பாட்டிக்கு 3 பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும் காமாட்சி பாட்டியை அவரது மகன்களும் மகள்களும் கைவிட்டு விட்டனர். ஆகையால் காமாட்சி பாட்டி யாருடனும் இல்லாமல் தனியாக ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்திருக்கிறார்.

தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக தினம்தோறும் ஊர் ஊராகச் சென்று தாம்பாளத் தட்டில் வாழை பழங்களை வைத்து கொண்டு தள்ளாத வயதில் விற்பனை செய்து வந்திருக்கிறார் காமாட்சி பாட்டி. இவரின் இன்னல்களைப் பற்றி சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் சில தகவல்கள் உலாவ ஆரம்பித்தது. உடனே பலரது பார்வை காமாட்சி பாட்டியின் மீது விழத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பலரும் காமாட்சி பாட்டிக்கு வேண்டிய உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என தானாக முன் வந்தனர்.

அதில் ஒருவர் காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வரும் பெண்ணும் அடங்குவார். அவர் காமாட்சி பாட்டியை மிகவும் கஷ்டப்பட்டு தொடர்பு கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர் அந்த பாட்டியிடம், என்னை உன் மகளாக நினைச்சுக்கோ.. இனிமேல் உனக்கு நான் இருக்கேன்.. மாசத்துக்கு ரெண்டு தடவை உனக்கு நான் போன் பண்றேன்..உனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நான் இனிமேல் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் காமாட்சி பாட்டியின் வங்கி கணக்கை பெற்றுக்கொண்டு மாதம் ரூபாய் ஆயிரத்தை அனுப்பி வைக்க முன் வந்திருக்கிறார். 

இதனை அறிந்த காமாட்சி பாட்டி, நீ இருக்கேன்னு சொன்ன வார்த்தையே போதுமா.. காசு எல்லாம் வேணாம் சாமி நீண்ட குரலில் அழுதிருக்கிறார். இருப்பினும் அந்த அமெரிக்க வாழ் இந்திய பெண் காமாட்சி பாட்டியின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாயை செலுத்தி இருக்கிறார். மேலும் கடைசி காலம் வரை தன்னால் முடிந்ததை நிச்சயம் அந்த பாட்டிக்கு செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் யாருமே இல்லாமல் மனதளவில் உடைந்து போன அந்த காமாட்சி பாட்டிக்கு புதிதாக ஒரு சொந்தம் துளிர் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.