பேத்தி பிறந்த 2 மாதம்..! குருணைப் பால் கொடுத்த கொடூர பாட்டி..! கருத்தம்மா பட பாணியில் நேர்ந்த விபரீதம்!

பிறந்து 2 மாதங்களேயான பெண் குழந்தையை குருணை பால் கொடுத்து பாட்டி கொலை செய்திருக்கும் சம்பவமானது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள பாரூர் நாகூர்கோட்டை  என்ற பகுதியை சேர்ந்தவர் யோசிராஜா. இவருடைய வயது 25. இவருடைய மனைவியின் பெயர் சத்யா. அவருடைய வயது 22. இத்தம்பதியினருக்கு 2 வயதான ஸ்ரீமதி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அரூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த பிறகு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

மாதம்தோறும் அதே மருத்துவமனையிலிருந்து செவிலியர் மங்கை குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு சத்யாவின் வீட்டிற்கு செல்வார். அப்போது 2 வயது குழந்தைக்கும் தடுப்பு ஊசி போடுவார். இந்நிலையில் சென்ற மாதம் 22-ஆம் தேதியன்று குழந்தைகளுக்கு செவிலியர் தடுப்பூசி போட வந்துள்ளார். அப்போது சத்யா மங்கையிடம் குழந்தை தன்னுடைய அக்காள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார்.

முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் மங்கை சந்தேகம் அடைந்துள்ளார். உடனடியாக மங்கை வட்டார மருத்துவரான ஹரிராமிடம் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஹரிராம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியபோது, அந்த குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது. இந்த செய்தியை ஹரிராம் அப்பகுதி காவல்நிலையத்தில் தகவலாக தெரிவித்தார். உடனடியாக காவல்துறையினர் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

குழந்தையின் சடலத்தை எடுத்து மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் குருணைப்பால் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை காவல்துறையினர் கண்டறிந்தனர். விசாரணை நடத்தியதில் குழந்தையின் பாட்டியான பொட்டியம்மாள் குருணை பால் கொடுத்து குழந்தையை கொலை செய்தது ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது போச்சம்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.