மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் சமூக விரோதிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்

தமிழகத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சமூக விரோதிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சங்பரிவார் அமைப்புகளையும் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைத்துள்ளது.


சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் மத ரீதியான மோதல்களை உருவாக்கும் நோக்கோடு சில சமூக விரோதிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேபோன்று சமூக தலைவர்களை இழிபடுத்தியும், ஊடகவியலாளர் மற்றும் அவர்களின் வீட்டு பெண்களை இழிபடுத்தியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக எச்.ராஜா, கல்யாணராமன், கிஷோர் கே.சுவாமி, மாரிதாஸ் போன்றவர்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.குறிப்பாக முஸ்லிம்களை தொடர்ந்து சீண்டுவதை இவர்கள் வழமையாக கொண்டுள்ளனர்.

 அதன் தற்போதைய முயற்சியாக முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்த கார்ட்டூன் வெளியிட்டு தனது மதவெறியை வெளிபடுத்தியுள்ளான் சமூக விரோதி வர்மா. கார்ட்டூனை வெளியிடுவேன் என்று கூறிய சுரேந்திர குமார் என்ற வர்மா கைது செய்யப்பட்ட பின்னரும் அந்த கார்ட்டூன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்த ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்த சமூக விரோதிகளை சட்ட ரீதியிலும், ஜனநாயக ரீதியிலும் தண்டனை பெற்று தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளரை சந்தித்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவனை பல்வேறு பிரிவுகளில் காவல்துறை உடனே கைது செய்தது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இவன் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.