தனியார் ஹாஸ்பிடலில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம்! வசூலுக்கு அனுமதி கொடுத்த எடப்பாடி அரசு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு பணத்தை சிகிச்சைக்காக பெற வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.


கொரோனா நோயானது இன்றிலிருந்து முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அங்கீகரித்த மருத்துவமனைகளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க தொடங்கலாம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெற வேண்டிய கட்டணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரைக்கு முதலமைச்சர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா சிகிச்சைக்கு அனைத்து மருத்துவமனைகளும் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் இருந்து நாளொன்றுக்கு 5,000 ரூபாயும், அனைத்து வசதிகளும் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனைகள் 9000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கைகளில் 25 சதவீதத்தை மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் நோயாளிகளுக்கு அனைத்து மருத்துவ மனைகளும் ஒதுக்க வேண்டும் என்றும், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஏற்கனவே மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 10 நாள் சிகிச்சைக்கான அறைவாடகை, நிர்வாக செலவு மருந்துகள், பராமரிப்பு செலவு, உணவு, தேநீர் ஆகிய அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட லாம் என்று அறிவித்துள்ளது. இந்த அரசாணையானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.