ஹேட்ரிக் எடுக்க யார்க்கர் வீசியது ஏன்? முகமது ஷமி வெளியிட்ட செம தகவல்!

நேற்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி ஹாட்ரிக் எடுத்து வெற்றியை தேடித் தந்தார்.


மகேந்திர சிங் தோனியின் அறிவுரைப்படி செயல்பட்டதாலேயே ஹாட்ரிக் எடுக்கமுடிந்தது என்று ஷமி பாராட்டியுள்ளார். நேற்று இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி போராடி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி ஹாட்ரிக் எடுத்து இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை கொண்டு வந்தார். போட்டிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஷமி, தான் ஹாட்ரிக் எடுப்பதற்கு தோனி கூறிய அறிவுரை மிகவும் உதவிகரமாக அமைந்தது என்று கூறினார்.

மேலும், ஹாட்ரிக் பந்தின் போது மகேந்திரசிங் தோனி தன்னிடம் வந்து, "யார்க்கர் பந்தை வீசு, ஹாட்ரிக் எடுப்பதற்கு தகுந்த பந்து. நிறைய முறை இம்மாதிரியான வாய்ப்புகள் வராது. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு யார்க்கர் பந்தைவீசி ஹாட்ரிக் எடு" என்று அறிவுரை கூறியதாக கூறினார்.

மேலும் கூறுகையில், தனக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், உடலையும் மனதையும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு முழுவதுமாக உபயோகப்படுத்துவதாகவும் கூறினார்.

ஆட்டத்தின் போது ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் நபி மிகவும் அற்புதமாக விளையாடி பயத்தை உண்டாக்கினார் என்றும், பயத்தை வெளிக்காட்டாமல் இருந்ததால் வெற்றியடைய முடிந்தது என்றும் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் முகமது ஷமியை பாராட்டி இந்திய ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.