சொன்னதை செய்தார் எடப்பாடி பழனிசாமி..! வந்தாச்சு அம்மா மினி கிளினிக்… தமிழக மக்களுக்கு நல்ல ஆரோக்கியம்தான்.

மனிதர்களுக்குக் கிடைக்கவேண்டிய செல்வங்களில் முக்கியமானது ஆரோக்கியம். பசிப்பிணியைத் தீர்க்க அம்மா உணவகம் போன்று, ஆரோக்கியத்துக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக் தொடங்கி பெரும் சாதனை படைத்திருக்கிறார்.


தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளவும் கிராமப்புற மக்கள் வசதிக்காகவும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று, சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல்வர் அறிவித்த 2,000 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இன்று தொடங்கப்படுகின்றன. சென்னையில் முதல் கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன.

கிராமப்புறம் 1,400, சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன. மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். கிளினிக் காலை 8 - 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை என 8 மணி நேரம் செயல்படும். கிளினிக்கில் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யலாம்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் மினிகிளினிக் திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. மினி கிளினிக்குகளில் ரத்தம் அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை வசதிகள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன் இ.சி.ஜி. கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்பநிலை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில் அம்மா உணவகம் வெற்றிக்கு கை கொடுத்தது போன்று, இந்த தேர்தலில் அம்மா கிளினிக் கை கொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது.