சிவலிங்கத்திற்கு பால் சொரிந்த பசு..! அதிசயங்கள் புரியும் பசுபதீஸ்வரர் தரிசனம்

எல்லா மதத்தினரும் அவரவர் வழிபாட்டு முறைகளைக் கொண்டு இறைவனை வழிபடுகிறார்கள்.


ஆனால் இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை உறுதி செய்து வருகிறார் தேவஸ்தான பொடையூரில் கோயில் கொண்டுள்ள பசுபதீஸ்வரர்.

முற்காலத்தில் இப்பகுதி முட்கள் நிறைந்த செடிகள் நிறைந்த காடாக இருந்துள்ளது. அப்போது இங்கே இடையர் இனத்தை சேர்ந்த ஒருவர் நிறைய பசுக்களைக் கொண்ட பண்ணை வைத்திருந்தார். அந்த பசுக்களை இந்த சங்க காட்டிற்குத்தான் மேய்ச்சலுக்கு ஓட்டி வருவார். அவற்றுள் வெண்ணிறம் கொண்ட பசு ஒன்று கன்று ஈன்றது. ஆனால் அது கன்றுக்கு பால் கொடுக்காமல் உதைத்துக்கொண்டே இருந்தது. தினசரி பசு இப்படியே செய்தது. மேய்ச்சலுக்குப் போகும் பசுக்கள் மடிநிறைய பாலோடு வரும்.

இந்த பசு மட்டும் மடி வற்றியே வந்தபடி இருந்தது. ஒரு நாள் மேய்ச்சலுக்குப் போன போது இடையன் அந்தப் பசுவை மட்டும் கண்காணித்த படியே இருந்தான். அந்தப் பசு மட்டும் சங்கஞ்செடி நிறைந்த புதர்ப் பகுதிக்குள் சென்று மடியிலிருக்கும் பாலை கீழே சொரிந்தது. இதைக் கண்ட இடையன் கன்றுக்குக் கூட பால் தராமல் மண் தரையில் பால் சொரிவது கண்டு கோபமுற்று கீழே கிடந்த கற்களை எடுத்து அந்தப் பசுவின் மீது எறிந்தான். கல்லடி பட்ட போதும் அது நகராமல் அங்கேயே நின்று பாலைச் சொரிந்த வண்ணம் இருந்தது. மேலும் கோபமுற்ற இளைஞன் கையில் இருந்த தடியால் பசுவை அடிக்க பாய்ந்தான். பயந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து.

அந்த பால் சொரிந்த இடத்தில் பால் பட்டு மண் கரைந்து ஒரு சிவலிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்தின் மீது இடையனின் கல்லடிபட்ட காயங்கள் இருந்தன. இதைக் கண்ட இடையன் அதிர்ச்சி அடைந்தான். அதே நேரம் பசு என் மேல் பால் சொரிந்து எம்மை இந்த உலகுக்கு வெளிக்காட்டவே இப்படிச் செய்தோம். அப்படிப்பட்ட பசுவை அடித்ததால் உன் பார்வை பறிபோகும் என்றது ஒரு குரல். மறுகணம் இடையனின் பார்வை பறிபோனது. கதறி அழுத இடையன், நான் அறியாமல் செய்த தவறு. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று வருந்தினான். அப்போது அசரீரி வாக்கு, இந்த இடத்தில் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பினால் உனக்கு பார்வையை மீண்டும் கிடைக்கும் என்றது. அதன்படி இறைவனுக்கு கோயில் எழுப்பினான். அவனது பார்வை மீண்டும் கிடைத்தது. அப்படிப்பட்ட இறைவனை பசுபதீஸ்வரர் என்றும் அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி என்றும் பெயர் வைத்து வழிபட்டு வருகிறார்கள்

பல நூற்றாண்டுகள் பழமையான இவ்வாலயத்தை பல மன்னர்கள் அவ்வப்பொழுது திருப்பணி செய்து முழுமையான கோவிலாக அமைத்துள்ளனர். விருத்தாசலத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் காலையில் ஊர் ஊராகச் சென்று கோழி வியாபாரம் செய்வார். முன்னிரவு காலத்தில் இந்த ஊருக்கு சைக்கிளில் கோழிக்கூண்டோடு வருவார். அதிகாலை வரை இவ்வாலயம் அருகே படுத்துக் கொள்வார். காலை கோழி கூவும் நேரத்தில் இந்த ஆலய இறைவனை தம்மை அறியாமலேயே கும்பிட்டு இறைவா இன்று வியாபாரம் பெருகி பணம் கிடைக்க அருள் செய் என வேண்டிக் கொண்டு செல்வார்.

அந்த முஸ்லிம் கோழி வியாபாரி சகல வசதிகளும் பெற்றார். இதற்குக் காரணம் இவ்வாலய இறைவனே என உணர்ந்து கோவிலுக்கு விளக்கு எரிக்க எண்ணெய் உட்பட பல பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார். அதுமட்டுமா; சிதிலமடைந்து வரும் ஆலயத்தை புனரமைக்குமாறு ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து அடிக்கடி கோரிக்கை வைத்துள்ளார். மாற்று மதத்தை சேர்ந்தவர் இறைவனின் அருமை பெருமைகளை உணர்ந்து கோவிலுக்கு தொண்டு செய்வதைக் கண்டு ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊர் கூடி கோவிலைத் தூய்மை செய்தனர். கோவில் திருப்பணிக்குழுவும், முஸ்லீம் வியாபாரியின் ஆதரவோடு பொருள் உதவியும் செய்ய, இவர்களுக்கு உறுதுணையாக விருத்தாசலம் ஏகநாதர் கோவில் வழிபாட்டு மன்றம் பெரும் பொருளுதவி செய்துள்ளது..இப்பொழுது மிக அழகிய வண்ணத்தில் ஆலயம் உருவாகி 12 9 2019 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தேவர்கள் படை படையாக வந்து இவ்வாலய இறைவனை வழிபட்டு சென்றனராம். அதனால் தேவர்கள் படையூர் என்றாகி காலப்போக்கில் தேவஸ்தான பொடையூர் என்று அழைக்கப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் ஆங்காங்கே தேவஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் தேவஸ்தானம் அமைக்கப்பட்டதால் தேவஸ்தான பொடையூர் என்று பெயர் உருவாகி உள்ளது என்று சொல்கிறார்கள். இங்கு இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் என மூன்று மதத்தினரும் வந்து வழிபடுகின்றனர்.

கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் இவ்வாலய இறைவனை வழிபட்டால் சரியாகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுபவர்களுக்கு வேண்டிய காரியங்களை வெற்றியாக்கித் தருகிறார் கம்பத்து விநாயகர். வள்ளி தெய்வானையுடன் உள்ள ஆறுமுகக் கடவுளை வழிபடும் ஆண் பெண் இருவருக்கும் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுகிறது. அகிலாண்டேஸ்வரியை ஆடி வெள்ளிக்கிழமைகளில் வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கிறது. இவ்வாலய இறைவனை வில்வ இலை கொண்டு பூஜை செய்பவர்கள் சகல நலமும் பெறுவார்கள் என்கிறார் அர்ச்சகர்.