இன்னும் எத்தனை கட்சி மாறுவார் ஞானசேகரன்? இனிமே வேலூரில் தி.மு.க.தான் ஜெயிக்குமாம்!

விசித்திரமான ஒரு தேர்தலை வேலூர் சந்திக்கிறது. ஆம், தி.மு.க. கூட்டணி படு ஸ்ட்ராங்காக இருக்கிறது.


துரைமுருகன் அவரது மகனுக்காக முதல்வரை ஐஸ் வைத்து, தன்னுடைய கூட்டாளி போலவே ஸ்ட்ராங்க் செய்துவிட்டார்.அதனாலோ என்னவோ... வேலூர் தொகுதிக்கு அமைச்சர் வேலுமணியை பொறுப்பாளராக அறிவித்ததும், அலறிய முதல் ஆள் ஏ.சி.சண்முகம்தான். ஏனென்றால், எதற்கெடுத்தாலும் எல்லோருடனும் சண்டை போடுவதுடன், ஜாதிப் பாசமும் கொண்டவர். அதனால், வேலுமணியே கதிர் ஆனந்துக்குத்தான் ஓட்டு போடுவார். அதனால், இவர் வேண்டாம் என்று சொன்னபிறகும், எடப்பாடி அசைந்துகொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான், இன்று தினகரன் டீமில் இருந்து வேலூர் சி.ஞானசேகரன் தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். இவரது வரலாறு மிகவும் நீளமானது மட்டுமின்றி அபத்தமானதும் கூட. ஆம், முதலில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு மூப்பனாருடன் த.மா.க.வுக்குப் போனார். பின்னர் காங்கிரஸ்க்குத் திரும்பிவந்தார். இப்போது வாசன் கட்சி தொடங்கியதும் வேகமாக அங்கே மாறிப் போனார்.

அதன்பிறகு அங்கிருந்து நேராக அ.தி.மு.க.வுக்குப் போனார். ஞானசேகரன் போனதும் அ.தி.மு.க. பிரிந்தது, அப்போது தினகரன் பக்கம் போய் நின்றுகொண்டார். இவருக்கு தினகரன் கட்சியில் பத்து பைசா அளவுக்குக்கூட மதிப்பு கொடுக்கப்படவில்லை. அதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த ஞானசேகரன், இப்போது தி.மு.க.வுக்குத் திரும்பி வந்திருக்கிறார்.

வேலுர் ஞானசேகரன் தி.மு.க.வுக்கு திரும்பிவந்திருப்பதால், தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி என்று துரைமுருகன் குஷியாக இருக்கிறார். ஆனால், உடன்பிறப்புகளுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. இந்தக் கட்சியிலும் அவரை மதிக்கப்போவதில்லை, மீண்டும் எங்கே போவார்...? பாவம்தான்.