பொதுநலச் சங்கத்தினரின் அன்புத் தோழன்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 24


கை நிறைய கோரிக்கைகளுடன் வரும் பொதுநல சங்கத்தினரை சமாளித்து அனுப்புவது மாநகராட்சி ஊழியர்களுக்கு ரொம்பவே சிரமமாகத் தெரியும். ஆனால், இவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி மிகவும் ஆர்வமாக வரவேற்பு கொடுத்தார். அவர்களிடம் நான் நேரில் பேசுகிறேன் என்றும் சொன்னார்.

காரணம் கேட்டபோது, ‘பொதுநலச் சங்கத்தினர் தன்னலம் பாராமல் பொதுநலத்துக்காக உழைப்பவர்கள். மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார்கள். அதோடு இவர்களது கோரிக்கைகள் எல்லாமே நியாயமாகவும் நகரின் வளர்ச்சிக்காகவும் இருக்கும். தங்கள் நேரத்தை குடும்பத்திற்கு செலவழிக்காமல் பொதுநலனுக்காக எந்த பிரதிபலனும் பாராமல் உழைக்கிறார்கள். ஆகவே, இவர்களை ஊக்குவிப்பது மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் நல்லது’ என்று எடுத்துக்கூறினார்.

எனவே, பொதுநலச் சங்கத்தினரின் கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்டார். அவர்கள் கூறும் குறைகளை எந்தெந்த வகையில் எல்லாம் நிவர்த்தி செய்ய முடியும் என்று அவர்களிடமும் ஆலோசனை கேட்பார். அதோடு பொதுநலச் சங்கத்தினர் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார் சைதை துரைசாமி.

ஒவ்வொரு பொதுநலச் சங்கமும் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிய புகார்களின் எண்ணிக்கை, தொடர் முயற்சி மேற்கொண்டதால் நிறைவேற்றப்பட்ட புகார் பணிகள், அந்த புகார் மீது நடைபெறும் பணிகள், இன்னமும் தொடங்கப்படாத பணிகள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இவற்றில் ஒவ்வொரு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட பொதுநலச் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டன. சிறந்த முறையில் செயல்பட்டதாக தேர்வு செய்யப்பட்ட சங்கங்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இதுதவிர, அனைத்து பொதுநலச் சங்கங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவிலும் ஒரு புதுமை புகுத்தினார் சைதை துரைசாமி.

- நாளை பார்க்கலாம்.