ஹலோ மேடம் நான் பேங்குல இருந்து பேசுறேன்! முதலமைச்சர் மனைவியின் ரூ.23 லட்சம் ஸ்வாகா!

பஞ்சாப் மாநிலத்தின் முதலைமச்சரின் மனைவியிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவமானது அஜித் சாங் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. கேப்டன் அம்ரீந்தர் சிங் முதலமைச்சராக உள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிரனீத் கவுர். இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இவர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பஞ்சாபில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

பிரனீத் கவுர் அளித்த புகாரில், "சென்ற வாரம் என்னுடைய மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. வங்கி மேலாளர் என்று கூறி ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் என்னிடம் சம்பளத்தை கணக்கில் செலுத்துவதற்காக அக்கவுண்ட் நம்பர் மற்றும் என்னுடைய ஏடிஎம் கார்ட் விவரங்களை பெற்றுக்கொண்டார்.

நான் என்னுடைய வங்கி சம்பந்தமான அனைத்து விபரங்களையும் அவரிடம் தெரிவித்தேன். பின்னர் அவர் சம்பளத்தை பரிவர்த்தனை செய்து விடுவதாக கூறினார். அடுத்த சில நிமிடங்களில் என் தலையில் பேரிடி விழுந்தது போன்று அமைந்தது. என் வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 23 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது" என்று கூறினார்.

அவருடைய மொபைல் போனுக்கு வந்த அழைப்பை காவல்துறையினர் ட்ரேஸ் செய்தனர். அப்போது மோசடியில் ஈடுபட்ட நபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

முதலமைச்சரின் மனைவியே மோசடியில் ஏமாந்துள்ள சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.