குழந்தை பிறந்து 10வது நாளில் கொரோனாவுக்கு பலியான இளம் தந்தை..! மருத்துவமனையில் காத்திருந்த தாய்க்கு வந்த அதிர்ச்சி தகவல்!

2-வது குழந்தை பிறந்த 10-வது நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் தந்தை உயிரிழந்திருப்பது பிரிட்டன் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 29,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 6,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்த்து தீவிரமாக போராடி வருகின்றன. பிரிட்டன் நாட்டின் இந்த வைரஸ் தாக்குதலின் வேகம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் நோய்த்தாக்கம் அசுரவேகத்தில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 

வேல்ஸ் நகரத்தை சேர்ந்தவர் தாமஸ் டேவிஸ். இவருடைய வயது 27. இவருக்கு 10 நாட்களுக்கு முன்னர் 2-வது குழந்தை பிறந்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அவர்கள் வீட்டிற்குள்ளேயே சமூக விதிகளை கடைபிடித்து வந்துள்ளனர். இதனால் அவரால் பிறந்த குழந்தையிடம் நெருங்கி பழக இயலவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தாமஸுக்கு சளி மற்றும் லேசான இருமல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே தாமஸ் உயிரிழந்துவிட்டார். 

இதுகுறித்து அவருடைய தாயார் கூறுகையில், "தாமஸ் மிகவும் ஆரோக்கியமானவர். புகை போன்ற எந்தவித கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. மேலும் பிறந்த குழந்தையை தன்னால் கொஞ்ச கூட இயலவில்லை என்று என்னிடமும் தன் மனைவியிடமும் தாமஸ் புலம்பினார். தாமஸின் மரணம் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் உலுக்கியுள்ளது. பிரிட்டன் மக்கள் அரசின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஒத்துழைக்க வேண்டும். இந்த நோய் தாக்குதலின் வீரியத்தை அவர்கள் புரிந்துகொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும்" என்று கதறி அழுதபடி கூறினார்.

இந்த சம்பவமானது வேல்ஸ் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.