ஊழியர்களுக்கு 2 மாதம் சம்பள பாக்கி..! தட்டிக்கேட்ட மேனேஜலை அசிங்கமாக திட்டிய சரவண பவன் நிர்வாகம்! ஒரு உயிரே பறிபோன பரிதாபம்!

பிரபல தனியார் உணவக நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் காந்தி சாலை, பேருந்து நிலையம், சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை ஆகிய 3 இடங்களில் சரவணா பவன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இங்கு கிட்டதட்ட 600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மேலாளரான பழனியப்பன் என்பவரிடம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழனியப்பன் நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மீண்டும் ஊழியர்களிடம் வந்து அடுத்த மாதம் நிச்சயமாக சம்பள நிலுவையை கொடுத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த ஊழியர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பழனியப்பன் நேற்று ஊழியர்கள் அனைவருக்கும் முன்பணமாக 5,000 ரூபாயை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலில் ஈடுபட்டதற்காக வடபழனியில் உள்ள உணவக நிர்வாகத்தினர், பழனியப்பனை தகாத வார்த்தைகளில் கடிந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

நேற்று காலையில் வழக்கம் போல போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நெடுநேரமாகியும் பழனியப்பன் போராட்டத்திற்கு வராததால் சந்தேகித்த சிலர் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

காந்தி சாலை சரவணபவன் உணவகத்திற்கு முன்னர் குவிந்த ஊழியர்கள், மேலாளரின் தற்கொலைக்கு உணவக நிர்வாகத்தினர் காரணமென்று குற்றம்சாட்டினர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அதோடு மட்டுமில்லாமல் உரிமையாளர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி கொண்டனர். ஆனால் ஊழியர்கள் யாரும் நேற்று பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

காவல்துறையினர் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து உணவக நிர்வாகத்தினரிடம் பேசி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.