போலீசிடம் சிக்கினால் மாவு கட்டு போட்ருவானுங்க..! ஊர் ஊராக ஓடும் தமிழ்ப்பட நடிகர்! பரிதாப நிலையில் தந்தை!

காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக பிரபல நடிகரும் அவருடைய தந்தையும் தலைமறைவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக படித்து வந்தவர் கவித்ரன். பின்னர் இவர் படித்துக்கொண்டு படங்களில் நடிப்பதை தொடங்கினார். இவர் "நம்ம கத" என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படத்தை இவருடைய தந்தையும், வட்ட செயலாளருமான கண்ணன் என்பவர் தயாரித்தார். மேலும் கண்ணன் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல மாணவர்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இவர் ஏமாற்றிய மாணவர்களில் ஒருவரான மூர்த்தி என்பவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுமளவிற்கு பாதிக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களை கண்ணன் மிரட்டியுள்ளார். மூர்த்தி அளித்த புகாரின் பேரில் கண்ணன், கவித்ரன், நிகவித்ரன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கண்ணன் மற்றும் கவித்ரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நிகவித்ரன் மட்டும் தலைமறைவானார். 5 நாட்கள் கழித்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதுமட்டுமின்றி சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த அற்புதராஜ் என்பவரை தலையில் வெட்டியதாக கண்ணன் மீது மற்றொரு வழக்கு பதிவாகியுள்ளது. இவற்றிலிருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் தலைமறைவாகி ஓடி ஒளிகின்றனர். 

இந்நிலையில் கவித்ரன் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். "என் தந்தை தியாகி ஆவார். ஒரு குறிப்பிட்ட பகுதி வடசென்னையில் முன்னேறி இருப்பதற்கு என்னுடைய தந்தையே காரணம். என் தந்தை வெட்டினால் வெட்டப்பட்டவரின் தலையில் 10 தையல்கள் இருக்கும். பாதிக்கப்பட்டவராக கூறப்படுபவரின் தலையில் வெறும் 5 தையல்களே உள்ளன. ஆகையால் என் தந்தை அவரை வெட்டவில்லை. வழக்குகளில் சிக்கினால் காவல்துறையினர் எங்களை அடித்து எலும்புகளை உடைத்து மாவு கட்டு போட வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தான் நாங்கள் தலைமறைவாக வாழ்ந்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

காவல்துறை சார்பில் கூறுகையில், "தவறு செய்தவர்கள் தலைமறைவாகி காவல்துறையினர் மீது ஃபேஸ்புக் வீடியோ மூலம் குற்றம் சாட்டுவது ஃபேஷனாகி விட்டது" என்று கூறியுள்ளனர்.

இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.