கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மதுரை சித்திரைத் திருவிழா ரத்து..! ஆனால் மகரிஷி மோட்சம் நிகழ்ச்சியை காணலாம்..! எப்படி தெரியுமா?
தமிழகத்தில் இன்றுவரை 1821 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 960 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சிறிது காலத்திற்கு நடத்தப்பட மாட்டாது என்று முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மதுரையில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் "ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மதுரை புறப்பாடு, தல்லாகுளம் எதிர்சேவை, வைகையாற்றில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மாண்டுக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், இராமராயர் மண்டகப்படி தசாவதார நிகழ்ச்சி, மைசூர் மண்டகப்படி பூப்பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெறும். ஆனால் தற்போது இந்த வைரஸ் பாதிப்பு காரணத்தினால் கள்ளழகர் மதுரை சென்று மீண்டும் திரும்புவது இயலாத காரியம்.
இதனால் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் உணர்ச்சியை புரிந்து கொண்ட காரணத்தால் மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் மற்றும் புராணம் வாசித்தல் ஆகிய நிகழ்வுகள் மட்டும் கோவிலின் உட்பிரகாரத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் 8.5.2020 அன்று மாலை 4:30 மணி முதல் 5 மணிவரை பேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் கண்டுகளிக்க இயலும். அதுமட்டுமின்றி "www.tnhrce.gov.in" இந்த சமூகவலைத்தளத்தில் மூலமாகவும் பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியானது மதுரை வாசிகளை பெரிதளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.