என்னையும் சேர்த்துக்கோங்க..! கொரோனா ஒழிப்பு பணியில் களம் இறங்கத் துடிக்கும் 80 வயது முதியவர்!

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தனக்கும் ஏதேனும் வேலையை ஒதுக்குமாறு ஓய்வுபெற்ற ஊர்க்காவல் அதிகாரி கூறியுள்ள வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 65,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 12,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 3372 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 267 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 77 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. 571 பேர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் என்பவர் தனக்கும் கொரோனா தடுப்பு பணியில் ஏதேனும் பணிகளை ஒதுக்குமாறு தன்னுடைய சொந்த ஊர் காவல் நிலையத்திற்கு சென்று முறையிட்டுள்ளார். இவர் 1993-ஆம் ஆண்டில் ஊர்க்காவல் பணியிலிருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது. 

தன்னுடைய பங்கும் இந்த தடுப்பு பணியில் இருக்கவேண்டும் என்பதற்காக அவர் காவல்நிலையத்திற்கு சென்று முறையிட்டதாக தெரியவருகிறது. இவர் 80 வயது கடந்தவர் என்பதால் தொற்று எளிதில் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் காவல்துறை மேலதிகாரி இவரது சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவர்கள் இருவரும் உரையாடிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.