மேட்ச் டை! ஆனாலும் இங்கிலாந்திற்கு கொடுக்கப்பட்ட உலகக்கோப்பை! ரசிகர்கள் அதிர்ச்சி!

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.


டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை எடுத்தது. நியூஸிலாந்து அணியின் ஹென்றி நிக்கோலஸ் அதிகபட்சமாக 55 ரன்களை எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு நியூஸிலாந்து அணிக்கு பந்துவீச்சில் அழுத்தத்தை கொடுத்தது. இதனால் இங்கிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அணியின் பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி அந்த அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்க ஆட்டம் ட்ராவில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்களை சூப்பர் ஓவரில் எடுத்தது.

16 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்க சூப்பர் ஓவரும் ட்ராவில் முடிந்தது. இதனால் இந்த போட்டியில் அதிக பவுண்டரிகளை அடித்த இங்கிலாந்து அணி ஐசிசி விதிப்படி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது.

ஆனால் இந்த விதி கிரிக்கெட் ரசிகர்களால் சிறிதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இரு அணிகளும் சமநிலையில் இருக்கும் போது பவுண்டரிகளை மட்டும் கணக்கிட்டு உலகக்கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வழங்கியதால் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.