சனி பகவான் நான்காம் இடத்தில் சஞ்சாரமா? அர்த்தாஷ்டம தோஷத்துக்கு இதோ பரிகாரம்!

சனிதேவர் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்வது அர்த்தாஷ்டம சனி ஆகும்.


உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி மருத்துவ செலவுகளால் சேமிப்புகளை விரயம் செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எதற்கெடுத்தாலும் வம்பு, தகராறு, கலகம் செய்து தனக்கு ஏற்படக்கூடிய இன்பத்தை தானே கெடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே, கவனமாக இருக்கவும்.

புதிய தொழில் முயற்சிகள் சரியாக அமையாமல் முயற்சிகளை கைவிடும் நிலைக்கு கொண்டு செல்ல நேரிடும். வாகனங்களால் விபத்துகளை ஏற்படுத்தி உடல் சுகங்களை கெடுக்க வாய்ப்புண்டு. உறவுகளால் வருத்தங்கள் ஏற்படும். கல்வியில் தடை, மந்த தன்மையை ஏற்படுத்தும்.

வேலையில்லா திண்டாட்டம் உருவாகும். பழைய வீடுகளை புதுப்பித்து அங்கு குடியேற்றம் செய்ய வைக்கும். தாயின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. கிரகங்களின் பார்வை, லக்ன அசுபர் மற்றும் சுபர் என்ற நிலைக்கு ஏற்ப தன் செயல்பாடுகளை உண்டாக்கும்.

அர்த்தாஷ்டம சனி நடைபெறும் நபர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை சாற்றி, புனுகு பூசி, வெண் பூசணி சாம்பார் கலந்த சாதம், அதிரசம் போன்றவற்றை படையல் போட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து 9 சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்எண்ணையுடன், எள் தீபமும் ஏற்றி, அர்ச்சனை செய்து வர வேண்டும்.

சதுர்த்தி தினம் அல்லது அஷ்டமி தினத்திலோ பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் அர்த்தாஷ்டம சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், தொல்லைகள் விலகும்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதோடு, ஹனுமான் சாலிசா படித்து வந்தால் அர்த்தாஷ்டம சனி பாதிப்புகள் அதிகம் ஏற்படாமல் காக்கும். உடல் ஊனமுற்ற ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, புத்தாடைகளை தானம் வழங்குவதாலும் அர்த்தாஷ்டம சனி பாதிப்புகள் நீங்கும். சனி கிழமைகள் தோறும் காகங்களுக்கு சோறு வைத்து வர வேண்டும்.