முதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமியின் பக்கா ஸ்கெட்ச்.

பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் போய் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் வரமாட்டார்கள் என்பது முன்கூட்டியே உளவுத் துறை மூலம் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்றாலும், சம்பிரதாய அழைப்பாகச் சென்றார்.


டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, சசிகலா விவகாரத்தை மிகத் தெளிவாக போட்டு உடைத்தேவிட்டார். இனி, எந்தக் காலத்திலும் சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தமே கிடையாது என்று கூறிவிட்டார்.

அதுமட்டுமின்றி, சசிகலா வெளியேவரும் தினமான 27ம் தேதியை ஜெ. நினைவிடம் திறப்பு விழாவாக அறிவித்துவிட்டார். இதற்கு காரணம் என்ன தெரியுமா? அன்றைய தினம் சசிகலா பற்றிய செய்தியை மீடியாக்கள் பெரிதாக்கக்கூடாது என்பதுதான்.

அதேபோன்று 28ம் தேதி சென்னைக்கு சசிகலா வரலாம் என்று தெரியவந்திருப்பதால், அன்றைய தினம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்க இருக்கிறார்.

இந்த போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியது. மேலும் அதனை நினைவு இல்லம் ஆக்குவதற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் 68 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் .அரசுடைமை ஆக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அக்குழு போயஸ் இல்லத்தில் மூன்று கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டது.. ஜெயலலிதா இல்லத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு இக்குழு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையின்படி அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், படித்த புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன. முக்கியமாக ஜெயலலிதாவின் பூஜை அறையும் பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட உள்ளது.. அவரது மார்பளவு கொண்ட சிலைகளும் இடம்பெற உள்ளன. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் நிலையில் போயஸ் கார்டன் இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடியார் என்ன செய்தாலும், அதில் ஒரு அழுத்தமும் ஆழமும் இருக்கும் என்பது புரிகிறதா என்று அதிகாரிகள் சொல்வது உண்மைதான்.