விபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, தமிழக மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துச் செய்தியை தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 18.1.2021 முதல் 17.2.2021 வரை ஒரு மாத காலம், சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு" என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்படும்.

சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தினை தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவில், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது குறித்த உறுதிமொழி எடுத்தல், ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல், சிறப்பு வாகன சோதனைகள் நடத்துதல், தொடர் விபத்து சாலைகளை கண்டறிதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 

மாண்புமிகு அம்மாவின் அரசு, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்தல், ஈர்ப்பு இசை தயாரித்து அகில இந்திய வானொலி பண்பலை சேவைகள் மூலமாக ஒலிபரப்புதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சாலைப் பாதுகாப்புப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மூன்று மாவட்டங்களுக்கும்,

ஒரு சிறந்த காவல்துறை ஆணையரகத்திற்கும் மாண்புமிகு முதலமைச்சரின் விருது வழங்குதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும், ‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக, தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

2020-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த அலங்கார அணிவகுப்பு ஊர்தி, அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தின் பின் அட்டையில் சாலைப் பாதுகாப்பு செய்திகள் அச்சிடப்பட்டு மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின்படி, 2016-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு 2020-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 54.04 சதவீதமாகவும் மற்றும் சாலை விபத்துகள் 38.23 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ஆம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2020-ஆம் ஆண்டில் 2 நபர்களாக குறைந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.