ஸ்டாலினுக்கு மீண்டும் சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி...!

ஊழல் புகார் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று எடப்பாடி பழனிசாமி தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். உடனே அதற்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு இரண்டு நிபந்தனைகள் விதித்து, சவாலுக்குத் தயார் என்று கூறினார் ஸ்டாலின்.


இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தின்போது கையில் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி, மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஸ்டாலின் பற்றியும், தி.மு.க. பற்றியும் முதல்வர் பேசியது இதுதான்.

 தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்றைக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். எங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார். அவர் கூறிய ஊழல் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, டெண்டர் ஒரு வருடங்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டு விட்டது. பிறகு எவ்வாறு அந்த டெண்டரில் ஊழல் செய்ய முடியும். ஏற்கனவே நான் கூறினேன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினீர்களே, தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள், சந்திக்கலாம், பேசலாம் என்று சொன்னால்.

""""நீதிமன்றத்திலே வழக்கு இருக்கிறது வாபஸ் வாங்கினால் தான் வருவோம்"" எனக் கூறுகின்றார். இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் செயல். நான் கூறியதைப்போல நீ வா, பேசு, எது தப்பு, எது சரி என்று சொல்.

 கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருக்கின்றபோது, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தின் மூலம் பொது வாழ்வில் இருக்கக் கூடிய எம்.எல்.ஏ., எம்.பி., அரசு ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த யார், யாரெல்லாம் டெண்டர் எடுக்கக்கூடாது என்று, அரசினுடைய சலுகைகளைப் பெறக்கூடாது என்று ஒரு பட்டியலை மத்திய அரசிடம் வாங்குகிறார்.

அந்த பட்டியலை படித்துக் காட்டுகிறேன், அப்பொழுதாவது திரு.ஸ்டாலின் தெரிந்து பேசட்டும். ஏனென்றால் எதிர்கட்சி தலைவருக்கு ஒன்றுமே தெரியாது. உச்சநீதிமன்றமே இவர்கள் போட்ட வழக்கு சரியில்லை என்று கூறி, தடையாணை வழங்கியிருக்கிறர்கள். உச்சநீதிமன்ற நீதியரசரை விடவா இவர் அறிவாளி. எங்கு பார்த்தாலும் இதையே பேசிக் கொண்டிருக்கிறார். 

டெண்டர் யார் யாருக்கெல்லாம் கொடுக்க கூடாது என்று கூறுகிறேன். இதனை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு பணியில் இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் தந்தை, வளர்ப்புத் தந்தை, தாய், வளர்ப்புத்தாய், கணவன், மனைவி, மகன், தத்துமகன், மகள், தத்து மகள், சகோதரன், தத்து சகோதரன், சகோதரி, தத்து சகோதரி, மனைவியின் தந்தை - தாய், கணவனின் தந்தை - தாய், சகோதரனின் மனைவி, சகோதரியின் கணவன், மகளின் கணவர், மகனின் மனைவி ஆகியோருக்குத்தான் டெண்டர் கொடுக்க கூடாது. இப்படி இருக்க நாங்கள் டெண்டர் கொடுத்தது தவறு என்று எப்படி கூறுகிறார் திரு.ஸ்டாலின்.

சட்டரீதியாக எங்களுடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார். நாங்கள் கொடுத்தது இ-டெண்டர். அமெரிக்காவில் இருந்து கூட இணையம் மூலமாக டெண்டரில் பங்கெடுக்கலாம்.

ஆனால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். டெண்டர் நோட்டீஸ் யாருக்கு வழங்கப்படுகிறதோ அவர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். யார் வேண்டுமனாலும் பங்குகொள்ளக்கூடிய எங்களுடைய முறை சிறந்ததா? அல்லது குறிப்பிட்டவர்கள் மட்டுமே பங்குகொள்ளக்கூடிய அவர்களுடைய முறை சிறந்ததா? மக்கள் நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள். 

ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தில் உள்ள 58 உறவினர்களின் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். திரு.கருணாநிதி அவர்கள் சென்னை வருகின்ற போது, திருட்டு ரயில் ஏறி வந்தார் என்பதை நாங்கள் சொல்லவில்லை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

ஆனால் நான் வைத்திருக்கும் சொத்து 1943லே எங்கள் தாத்தா அவர்கள் வைத்திருந்த சொத்து ஆகும் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எந்த நிபந்தனையும் விதிக்காமல் விவாதத்திற்கு வர முடியுமா என்று ஸ்டாலினுக்கு மீண்டும் நேரடியாக சவால் விட்டுள்ளார். ஸ்டாலினுக்குத் தைரியம் வருமா...?