ஜெயலலிதாவால் முடியாததை சாதித்த எடப்பாடி பழனிசாமி... சசிகலா அரசியலுக்கு முழுக்கு...

முக்குலத்தோர் ஓட்டு வங்கியை காரணம் காட்டி, அ.தி.மு.க.வை மிரட்டிவந்த சசிகலா, அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைதான் என்று அ.தி.மு.க.வினர் கொண்டாடி தீர்க்கிறார்கள்.


சசிகலா சிறையிலிருந்து விடுதலையான பின்னர், ஏதாவது நடக்கும் என சில திமுக ஆதரவு ஊடகங்கள் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டன. திமுக தலைவர் ஸ்டாலினும் அப்படித்தான் பேசி வந்தார். ஆனால் எல்லாமே ஒரே நாள் கூத்தோடு முடிந்துபோனது.

சிறையிலிருந்து விடுதலையான அன்று வெளியில் தலைகாட்டிய சசிகலா, அப்படியே வீட்டுக்குள் முடங்கி விட்டார். தாம் விடுதலையான பின்னர், தம்மை சில அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்து பார்ப்பார்கள். தொண்டர்கள் தனது வீட்டு முன் தவம் கிடப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை;

சீமான், பாரதிராஜா போன்ற சினிமாக்காரர்கள்தான் அவரைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். எடப்பாடி கட்சித் தலைமைக்கு வந்ததிலிருந்துதான், சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலின் தலையீடு இல்லாமல் அதிமுகவினர் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்.

ஆனால், கூட்டணி கட்சி என்ற நட்புணர்வு அடிப்படையில், பாஜக கூட சசிகலாவைச் சேர்க்கலாமே எனச் சொல்லி பார்த்தது. கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது கூட இந்தப் பேச்சு வந்தது. ஆனால் சசிகலாவை ஒருபோதும் கட்சிக்குள் ஏற்க முடியாது என ரொம்பவே ஸ்ட்ராங்காக நின்றார் எடப்பாடி. அவரது உறுதியைப் பார்த்து மேற்கொண்டு மோடி வற்புறுத்தவில்லை.

அதேபோன்றுதான், அண்மையில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் கூட்டணி தொடர்பாக எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினார். சசிகலா குறித்துப் பேசியபோது, அவரிடமும், பிரதமரிடம் அதே சொன்ன அதே பதிலைச் சொல்லி, உறுதியுடன் மறுத்துள்ளார்.

 எடப்பாடி காட்டிய அந்த உறுதி, அமித்ஷாவையும் அசைத்துவிட்டது. முடிவாக, " ஆல் ரைட்... உங்க விருப்பப்படியே செய்யுங்க...' என்று க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார்.

 இந்த தகவல் எல்லாம் சசிகலாவுக்கும் சென்றுவிட்டது. இதையறிந்த பின்னர்தான், இனி தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார். அதன் வெளிப்பாடுதான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் வெளியிட்ட அவரது அறிக்கை. இதற்கான பெருமையெல்லாம் எடப்பாடியையே சாரும் என்று அ.தி.மு.க.வினர் கொண்டாடி வருகிறார்கள். 

ஜெயலலிதாவையே கைகுள் வைத்திருந்த சசிகலாவை அரசியலில் இருந்து விரட்டுவது என்றால் சும்மாவா... கெத்து காட்டிட்டார் என்பது சரிதான்.