அரசு பள்ளி மாணவர்களுக்கு எடப்பாடி அரசு 7.5% உள் ஒதுக்கீடு! நடிகர் சூர்யா பாராட்டு!

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யாவின் அறிக்கை சமீபத்தில் மிகப்பெரும் அரசியல் புயலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எடப்பாடி அரசு 7.5% உள் ஒதுக்கீடு கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து ட்வீட் போட்டிருக்கிறார்.


அவரது ட்வீட்டில், ‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளதுடன், மாணவர்களுக்கு துணை நிற்போம்...ஒன்றிணைந்து செயல்படுவோம்...’ என்று கூறியிருக்கிறார். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இடம் கிடைப்பதே இல்லை.

ஆகவே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300க்கும் மேற்பட்ட 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் பலனடைவார்கள். எனவே, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் பாராட்டி வருகின்றனர்.