கொரோனா காலத்தில் பா.ஜ.க. மதவாதத்தை கையில் எடுத்திருப்பது ஏன்..?

நாடும் மக்களும் கொரோனா தொற்றினாலும் பொருளாதார இழப்பினாலும் அல்லல்பட்டுக்கொண்டு வருகையில் மோடியர்களின் கவலை மதவெறி நோக்கிப் போயிருப்பதற்குப் பின்னே தாங்கமுடியாத தோல்வி இருக்கிறது என்று ஓர் பதிவு வைரலாகி வருகிறது.


சீனாவை எதிர்கொள்ள முடியாமல் மோடி முழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றார். அவரின் திணறல்களில் நம் கவனம் போய்விடாமல் இருக்க, மோடியர்களுக்கு மதவாதமே கைகொடுக்கும் என்கிற நெருக்கடி ஏற்பட்டுள்ளது போலும்.

இந்த மதவாதத்தை உச்சிக்குக் கொண்டுசென்றுவிட்டால், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் கையை முறுக்கி ஏராளமான தொகுதிகளைப் பெற்றுவிடுவதற்கான தந்திரமும் உள்ளது. எனவே இந்த மதவாதப் போக்கினால் திமுகவை விடவும் அதிமுக கடும் நெருக்கடிக்குப் போய்விடும்.

இதை அதிமுக உணர்ந்திருக்குமென்று நம்புகிறோம். நிர்மலா சீதாராமன் மீது அதிமுக பாய்ந்திருக்கிறது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கிய விவகாரத்தில் நிர்மலா பொய்யைச் சொல்கிறாரென்று மாஃபா பாண்டியராஜன் நேரடியாகச் சாடியிருப்பதை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதல்வர் பழனிசாமி பாஜகவைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்துவிடுவார் - நாடாளுமன்றத் தேர்தலில் அவர் அப்படித்தான் பாஜகவைக் கதறவிட்டார். ஐந்து தொகுதிக்கு மேல் கிடையாது, மூச்சுக் காட்டாமல் ஓடிவிடு என்று பழனிசாமி பாஜகவை விரட்டியடித்த கதையை உலகம் மறக்காது. ஐந்தை ஒதுக்கி அதிலும் தனக்குப் பழுதான மூன்று தொகுதிகளை பாஜகவின் தலையிலேயே கட்டிவிட்டார். இதையெல்லாம் மனத்தில் வைத்துத்தான் இப்போது பாஜகவின் சில்லறைக் குட்டிகள் மதவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றன.

இதைத் தி.மு.க. எந்த அளவிற்குக் கவனம் கொண்டுள்ளது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. திமுகவை முந்திக்கொள்ள அதிமுகவை விட்டுவிடக் கூடாது. அந்தப் பொறுப்பு அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதனால் மிகுந்த அக்கறையோடு தி.மு.க. இந்த மதவாதச் சூழலை எதிர்கொள்ள வேண்டும்.

மின்கட்டணக் கணக்கீட்டுக்கெதிரான திமுகவின் போராட்டம் அதில் ஒரு சிறுபகுதிதான். பாஜக இழுக்கிற திசைக்குச் சென்று தி.மு.க. தன் சக்தியை விரயம் செய்யலாகாது. மாறாக, தான் செய்யக் கூடிய எதிர்ப்பு அரசியலை நோக்கிப் பாஜகவைக் கதறிக்கொண்டு ஓடிவரச் செய்ய வேண்டும். அந்த அவசியம் தி.மு.கவிற்கு இருக்கிறது.

மோடி அரசு தன் மதியீனத்தால் எத்தனையோ இடர்களை மக்களின் மீது சுமத்தியிருக்கிறது. அந்தச் சுமைகளில் கைவைத்து மாநிலத்தின் கோபத்தை மோடி அரசின் மீது திருப்பிவிட வேண்டும். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், ஒன்றும் சொல்வதற்கில்லை என்கிறது அந்த பதிவு.