நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்… வீதிக்கு வருகிறது திராவிடர் கழகம்

கொரோனா தொற்று நேரத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்று பல்வேறு மாநிலங்கள், மக்கள், கல்வியாளர்கள் எடுத்துக் கூறியும் விடாப்பிடியாக நடத்துகிறது மத்திய அரசு.


இதையடுத்து ‘நீட்' தேர்வு ரத்து செய்யக் கோரி நாளை நடைபெறும் அறவழி ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களை தலையெடுக்காமல் செய்யும் அவர்களின் உயிரைக் குடிக்கும் ‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்றும், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்குக் கோரும் அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பிறப்பிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி மத்திய - மாநில அரசுகளை செயல்பட வைக்க,

நாளை (27.8.2020) காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்க! அவசர சட்டம் இயற்றுக! மாணவர்களின் உயிரைப் பறிக்கும் கரோனா தொற்றைவிடக் கொடியது ‘நீட்’ தேர்வு, பிடிவாதம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு, அவரவர் வீட்டின் முன்பு, முகக்கவசம் - தனிநபர் இடைவெளி இவற்றைக் கடைப்பிடித்து, நடைபெறும் அறவழி ஆர்ப்பாட்டத்தில்,

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு, கழகப் பொறுப்பாளர்களுடன் 

பங்கேற்பார்.

சென்னை பெரியார் திடல் முன்பு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும், கழகப் பொறுப்பாளர்களும் அறவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.