சுனாமியை வென்றவர்..! சென்னையை கொரோனாவில் இருந்து காப்பாற்ற களம் இறங்கிய ராதாகிருஷ்ணன்! இவரை எடப்பாடி நம்புவது ஏன்?

சென்னையில் மிக வேகமாக கொரோனோ பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன்.


கடந்த ஏப்ரல் 27ந் தேதி முதல் சென்னையில் கொரோனாவின் பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 27ந் தேதி அன்று சென்னையில் 47பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மறுநாள் சென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 29ந் தேதியும் சுமார் 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

30ந் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1ந் தேதி இந்த பாதிப்பு மேலும் அதிகரித்து சுமார் 178 பேருக்கு கொரோனா சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.

இப்படி சென்னையில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவை தடுக்கவே சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1992ம் ஆண்டு ஐஏஎஸ் பட்டம் பெற்றவர். 2001ம் ஆண்டு சேலம் கலெக்டராக நியமிக்கப்பட்டார். பிறகு 2004ம் ஆண்டு தஞ்சை கலெக்டரானார்.

கும்பகோணம் தீ விபத்து நிகழ்ந்த போது தஞ்சை கலெக்ட்டர் இவர் தான். அங்கு மீட்பு பணிகளை விரைவு படுத்தியதுடன் உயிரிழந்த குழந்தைகளின் சடலங்களை விரைவாக மீட்டு கும்பகோணத்தை இயல்புநிலைக்கு கொண்டு வந்ததில் ராதாகிருஷ்ணனுக்கு முக்கிய பங்கு உண்டு. இதன் மூலம் சிறந்த நிர்வாகி என்று இவர் பெயர் எடுத்தார்.

இந்த நிலையில் தான் 2004ம் ஆண்டு டிசம்பர் 25ந் தேதி தமிழகத்தை சுனாமி தாக்கியது. அப்போது சுனாமியில் நாகை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சுனாமி மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ராதாகிருஷ்ணன் நாகை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மீட்பு பணிகளை மின்னல் வேகத்தில் முன்னெடுத்தார் ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து நிவாரணப்பணிகளையும் ராதாகிருஷ்ணன் சிறப்புற செய்தார். அத்தோடு தன்னார்வலர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்ததன் மூலம் அப்பகுதி மக்கள் எளிதாக உதவி பெற ராதாகிருஷ்ணன் காரணமாக இருந்தார். தொடர்ந்து நாகையில் சுனாமி மறுவாழ்வுப் பணிகளிலும் ராதாகிருஷ்ணன் முத்திரை பதித்தார்.

2005ம் ஆண்டு அமெரிக்கா முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஐநா சபையின் சிறப்பு தூதுவராக நாகை வந்த போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சுனாமி நிவாரணப்பணிகளை பார்த்து அசந்து போனார். அத்துடன் ராதாகிருஷ்ணனை தனிப்பட்ட முறையில் பாராட்டிச் சென்றார் கிளிண்டன். 

தற்போது வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணன், சிறுவன் சுஜித் கடந்த ஆண்டு ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது இரவு பகலாக மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டவர். இப்படி தான் கொண்ட பணியில் முழு ஈடுபாட்டுன் ஈடுபடும் ராதாகிருஷ்ணன் தான் சென்னையில் கொரோனாவை தடுக்க சரியான ஆள் என்று முதலமைச்சர் முடிவுக்கு வந்துள்ளார். இதன் அடிப்படையில் சிறப்பு அதிகாரியாக செயல்படும் ராதாகிருஷ்ணன் சென்னையில் கொரோனாவை தடுத்து சிறப்பு செய்வார் என எதிர்பார்க்கலாம்.