முதுகுவலி வந்ததும் பதறாதீங்க.. நிச்சயம் குணப்படுத்தலாம்!! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

தீரவே தீராத வலி என்று பலரும் முதுகுவலியை சொல்வார்கள். ஏனென்றால் எத்தனை மருத்துவம் செய்தாலும் சரியாகாது. இதற்குக் காரணம் மருத்துவத்தில் மட்டும் தீர்வு இல்லை, வாழ்க்கை முறையும் மாற வேண்டும். அப்போதுதான் முதுகு வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.


கடுமையாக வலிக்கும்போது படுக்கையில் நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.வலிக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.

உட்காரும் போது நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது. இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.

கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள். உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.

நிற்கும்போது இரண்டு கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக அமரும்படி நில்லுங்கள். நெடுநேரம் நிற்க வேண்டி இருப்பின் சற்று சுற்றிச் சுற்றி நடந்து செல்லுங்கள். உங்கள் உடல் எடையை ஒரு கால் விட்டு ஒருகால் என்று மாற்றி மாற்றி தாங்க வையுங்கள். நெடுநேரம் நிற்கும்போது முதுகில் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க ஒரு ஸ்டூல் அல்லது படி மீது ஒரு கால் மாற்றி ஒரு கால் உயர வையுங்கள்.

மருத்துவர் சொல்லும் உடற்பயிற்சி, மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதுடன் டென்ஷனைக் குறையுங்கள். இதுதான் முதுகுவலிக்கு அதிக காரணமாக இருக்கிறது.