திமுகவில் ஆதிக்கம்: சபரீசனை மீறி டெல்லியில் ஜெயிப்பாரா கனிமொழி?

தி.மு.க.வில் இருந்து அழகிரியை ஓரங்கட்டியது போன்று கனிமொழியையும் வெளியேற்ற எத்தனையோ முயற்சிகள் நடந்துவந்தன. ஏன், சமீபத்தில் சோனியாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது வேண்டுமென்றே சபரீசன்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


டெல்லியில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றால் எம்.பி. பதவி வேண்டும், அதுவும் மக்களவை பதவி வேண்டும் ;என்ற எண்ணத்துடன் தூத்துக்குடியில் களம் இறங்க முடிவுசெய்துவிட்டார் கனிமொழி. ஏற்கெனவே இப்படியெல்லாம் எதிர்பார்த்தோ என்னவோ, தூத்துக்குடி தொகுதியை தனக்காக தேர்வு செய்து, அதற்காக வேலையும் பார்த்திருந்தார் கனிமொழி.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்தை தன்னுடைய எம்.பி.நிதியின் கீழ் தத்தெடுத்தார். அதுமட்டுமின்றி, வெங்கடேசுவரபுரம் கிராமத்தில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. செங்குளம், சந்தோஷபுரம், உடையாண்டி ஆகிய கிராமங்களில் தலா ஆறரை லட்சம் ரூபாய் செலவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. சாலைப்புதூரில் உள்ள ஆரம்ப சுகதார நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

மூன்று படுக்கையாக இருந்த ஆரம்பசுகாதார நிலையம் 10 படுக்கை நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அங்கு வருகிறவர்களுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டது. பஞ்சாயத்து முழுவதும் சோலார் மூலம் தெருவிளக்குகள் அமைக்க 20 லட்சம் ஒதுக்கினார். ஆனால், அதிகாரிகள் டெண்டர் விடாமல் தாமதப்படுத்தினார்கள். அதையும் சரிசெய்து முடித்தார்.


அந்த பகுதியில் உள்ள மொசலை குளத்தில் இருந்து போர் மூலமே தண்ணீர் சப்ளை நடந்து வருகிறது. அந்த குளம் தூர்வாராமல் முள்செடிகள் வளர்ந்து காடாக காட்சியளித்தது. 68 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த குளத்தை தனது சொந்த பணத்தில் தூர்வாரினார். அந்த பகுதியில் கேந்திர வித்தியாலயா பள்ளி கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால், ஆட்சியாளர்கள் ஆதரவு இல்லாததால் அந்த திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

இத்தனை வசதிகள் செய்துகொடுத்து, அதனை வாக்குகளாக அறுவடை செய்ய நினைக்கிறார் கனிமொழி. வழக்கமாக இந்தத் தொகுதியில் யார் நின்றாலும், இரண்டு துருவங்களாக இருக்கும் கீதாஜீவனும் அனிதாராதாகிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் வீழ்த்தவே முயல்வார்கள். ஆனால், கனிமொழி. போட்டியிட்டால் இரண்டுபேரும் போட்டிபோட்டு வேலை செய்து வெற்றி வாங்கித் தருவார்கள் என்று கனிமொழி நம்புகிறார்.

கனிமொழிக்கு தூத்துக்குடியை தாரைவார்க்க ஸ்டாலின் தயாராகவே இருக்கிறார். அதேநேரம் வெற்றிபெறுவது அவருடைய திறமை என்று சொல்லப்பட்டுள்ளதாம்.அதாவது கனிமொழிக்காக சிறப்பு கவனிப்பு எதுவும் தி.மு.க.வில் இருக்காது என்பதுதான் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளதாம். இப்போது கனிமொழியை தோற்கடிக்க இருப்பது எதிர்க்கட்சியினர் அல்ல, தி.மு.க.வினர்தான். அதுவும் அவரது உறவுதான்.

ஆம், சபரீசன் மட்டும்தான் கனிமொழிக்கு ஒரே போட்டியாக டெல்லியில் இருக்கிறார். கனிமொழியை தோற்கடித்துவிட்டால், டெல்லி கண்ட்ரோல் முழுமையாகவே தன் கைக்கு வந்துவிடும் என்று மருமகன் சபரீசன் கருதுகிறார். மருமகனே உன் சமர்த்து என்று ஸ்டாலின் இந்த விஷயத்தில் விலகிக்கொண்டாராம். அதனால் தனக்கு நெருக்கமான ஆட்கள் மூலம் கனிமொழிக்கு தூத்துக்குடியில் இடைஞ்சல் கொடுக்க தயாராகிவருகிறார் சபரீசன்.

ஆக, மற்ற எந்தத் தொகுதியையும்விட தூத்துக்குடி இந்த முறை ஸ்டார் தொகுதி அந்தஸ்து பெறப்போகிறது. சபரீசன் - கனிமொழி மோதல் இந்த தொகுதியில் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்கிறார்கள்.