விசுவாசத்தின் மறுபெயர் டைசன்! உரிமையாளரை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு மாண்டது!

உரிமையாளரையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலம் குர்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர் ஷரீஃப். இவர் டைசன் என பெயர் சூட்டப்பட்ட நாயை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார். கடந்த திங்கட்கிழமை அன்று இரவு நான் வெகு நேரமாக குறைத்து கொண்டிருப்பதை அமர் கேட்டார். என்னவென்று பார்ப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றபோது, ஒரு பாம்பு ஒன்று வாசலில் இறந்து கிடந்தது. அதன் அருகில் அவர் வளர்த்த செல்ல நாய் ஆன டைசன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. 

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை டைசன் கடித்துக் கொன்று இருப்பது அமருக்கு அப்போது புரிந்தது. டைசனின் விசுவாசத்தை நினைத்து அமர் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அவரது மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. டைசன் நாயானது சிறிது நேரத்தில் மயங்கி பொத்தென்று கீழே விழுந்தது.

அதன் உடலை சோதித்து பார்க்கையில் பாம்பு கடித்ததற்கான தடயங்கள் இருந்தன. உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. டைசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. செல்ல நாய் உயிரிழந்ததை அடுத்து அவர் மனம் உடைந்து போனார். ஆனால் அந்த நாயின் விசுவாசமானது சமூகவலைதளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.