மூக்கிற்குள் சிக்கிய கொலுசு..! மூச்சுவிட முடியாமல் தவித்த 3வயது சிறுமி! ஆனால், அரசு மருத்துவர் செய்த செயல்!

சிறுமியின் மூக்குக்குள் கொலுசு முத்து சென்றதால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்த சிறுமியின் மூக்கிலிருந்து லாவகமாக கொலுசு முத்தை வெளியேற்றிய அரசு மருத்துவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீயத்தூரை சார்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது 3 வயது சிறுமி மிதுனா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக காலில் இருந்த கொலுசு முத்து அவரது மூக்கில் சென்றுவிட்டது. இதனால் அந்த சிறுமி மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு இருந்தார். இதனால் அவரது மூக்கில் ஏதோ சென்றிருக்கிறது என்பதை அறிந்த அவரது பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர் ரபீக் என்பவர் சிறுமியை பரிசோதித்து அவரது மூக்கில் கொலுசு முத்து மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டறிந்தார். இதனால் அதை எடுக்கும் தீவிர முயற்சியில் அவர் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியோடு சிறுமியின் மூக்கில் இருந்த கொலுசு முத்துவை லாவகமாக வெளியில் எடுத்து சிறுமியின் உயிரை அந்த மருத்துவர் காப்பாற்றினார். 

இதுபற்றி பேசிய அரசு மருத்துவர் ரபிக் அவர்கள், கொலுசு முத்து மூச்சுக்குழாய்க்குள் சென்று இருந்தால் சிறுமியின் உயிருக்கே ஆபத்தாய் இருந்து இருக்கும். ஆனால் சிறுமியின் மூக்கில் உள்ள துவாரத்தில் மாட்டிக் கொண்டிருந்ததால் சிறிது நேரத்தில் எங்களால் அதை எடுக்க முடிந்தது. சிறுமியின் மூக்குக்குள் ஏதோ பொருள் சென்றுவிட்டது என்று அறிந்தவுடன் பெற்றோர்கள் அதை எடுக்க முயற்சி செய்யாமல் மருத்துவமனைக்கு கொண்டு வந்தது சிறப்பான செயல் எனவும் அவர் கூறினார்.சிறுமி தற்போது நலமுடன் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.