டீன் ஏஜ் வயதுப் பிள்ளைகள் பெற்றோரைவிட செல்போனை உயர்வாக மதிப்பது ஏனென்று தெரியுமா?

செல்போன் நோண்டிக்கொண்டே இருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் என்ன சொன்னாலும் எரிச்சல் படுவார்கள், சட்டென கோபம் கொள்வார்கள். அந்த டீன் ஏஜ் வயதினரிடம், ‘உனக்கு செல்போன் வேண்டுமா அல்லது பெற்றோர் வேண்டுமா?’ என்று கேட்டால் கொஞ்சம்கூட யோசிக்காமல் செல்போனைத்தான் தேர்வு செய்வார்கள்.


அந்த அளவுக்கு செல்போன் ஆறாவது விரல் போன்று மாறிவிட்டது. எந்த நேரமும் செல்போனில் எதையாவது நோண்டிக்கொண்டே இருப்பார்கள். யாருக்காவது மெசேஜ் அனுப்பிக்கொண்டும், தானே சிரித்துக்கொண்டும் இருப்பார்கள். இந்த செயலைப் பார்த்து கோபப்படாத பெற்றோர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். செல்போன் காரணமாகவே வீட்டில் ஏகப்பட்ட சண்டை நடக்கும்.

செல்பேசியை காதில் வைத்து பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்னதான் முக்கியமான விஷயம் என்று பார்த்தால் எதுவுமே இருக்காது. நட்பு வட்டாரத்தினர் சொல்லும் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் சிரிப்பார்கள். இந்த செல்போன் விஷயத்துக்காக சண்டை போட்டால் நிச்சயம் தீர்வு ஏற்படவே செய்யாது. அதனால் வேறு விஷயங்களில் அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும். பாடம் பற்றியும் பரிட்சை பற்றியும் அவ்வப்போது பேசி அவர்களை அதில் கவனம் செலுத்தச் செய்யவேண்டும். 

செல்போன் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதாவது இரவு 10 மணிக்கு மேல் செல்போன் தொடக்கூடாது. சாப்பிடும்போது செல்போன் பார்க்க்க்கூடாது, படிக்கும்போது செல்போனை ஓரங்கட்ட வேண்டும் என்று சில விதிகளை வகுத்துக்கொண்டு, அதனை மட்டும் கண்காணித்தால் போதும். மற்ற நேரங்களில் என்ன செய்கிறார் என்று அருகே இருந்து கண்காணிப்பது எரிச்சலை ஏற்படுத்திவிடும். ஏனென்றால் தோழன், தோழிகளிடம் மனம் விட்டுப் பேசுவது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும்.  இதனைக் கெடுக்கும்விதமாக ஒட்டுக் கேட்காமல், கொடுக்கும் சுதந்திரத்தை முழுமையாக கொடுங்கள்.

செல்போனை தூக்கி ஒளித்துவைப்பதும், இணையத்தை கட் செய்வதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும். அதனால் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது.