பியர் கிரில்ஸ்சுடன் காட்டுக்குள் நரேந்திர மோடி சூட்டிங் எப்போது நடந்தது தெரியுமா? அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என நாடே பரபரத்துக்கொண்டிருந்த நேரத்தில், டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இருந்திருக்கிறார் பிரதமர் என்று சொல்லப்படுகிறது.


இதுகுறித்து வினவு இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தகவல் இது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலை 3 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எங்கே இருக்கிறார் என நாடு தேடிக்கொண்டிருந்தது. நான்கைந்து மணி நேரம் கழிந்த பிறகும்கூட பிரதமர் பற்றிய தகவல் இல்லை. அன்று 2.30 முதல் 4.30 மணி வரை ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் ‘ஷூட்டிங்கில்’ இருந்ததாக காங்கிரஸ் கட்சியும் சில ஊடகங்களும் கூறின.

ஆனால், என்ன ‘ஷூட்டிங்’ என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த இருபதாண்டுகளில் இந்திய இராணுவத்தின் மீது காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என நாடே பரபரத்துக்கொண்டிருந்த நேரத்தில், டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இருந்திருக்கிறார் பிரதமர்.

புல்வாமா தாக்குதல் நடத்தபட்ட சமயத்தில் பிரதமர் எங்கே இருந்தார் என எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் கேள்வி கேட்ட நிலையில், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பிரதமர் ராம்நகர் அருகே புலிகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்தார் என தெரிவித்தார். ஜிம் கார்பெட் சரணாலய நிர்வாகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. ரவி சங்கர் குறிப்பிட்ட ராம்நகர் கார்பெட் சரணாலய பகுதியில்தான் அமைந்துள்ளது.

பிப்ரவரி 14 தேதி வாக்கில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் இந்தியாவில் முக்கியமான நபருடன் சூட்டிங்கில் இருப்பதாக தனது ட்விட்டர் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவுகள் சில நாட்களில் அழிக்கப்பட்டன. இந்த விவரத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், திங்கள்கிழமை டிஸ்கவரி சேனல் வெளியிட்ட விளம்பரத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் மோடி ஜிம் கார்பெட் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் தோன்றியிருக்கிறார். அதில், “சுற்றுச்சூழலையும் வன உயிரினங்களையும் எப்படிப் பாதுகாப்பது என உலக மக்களுக்கு சொல்லப்போகிறேன்” என்கிறார் பிரதமர்.

‘நாட்டைக் காப்பாற்றும் இராணுவ வீரர்கள்’ என முழங்கிய மோடி, அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்ட நிலையில், வனத்தைக் காப்பாற்ற கிளம்பியிருக்கிறார் என சமூக ஊடகங்களில் மக்கள் சிரித்து வைத்திருக்கின்றனர். மோடியின் சாகசங்களைப் பார்த்து சிரித்துவைப்போம் மக்களே... மோடியின் யுகத்தில் வாழ்ந்ததற்காக பெருமைப்படுவோம்.