மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

ஒருவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது


   கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான அளவு  ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை.  இதுபோன்ற நேரங்களில்  மார்பு இறுக்கம் என்ற அறிகுறி தோன்றும். உடனடியாக ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும் பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.

   மாரடைப்பு நோய்க்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம் தோன்றும். இரு தோள்களில் - முக்கியமாக இடது தோளில்   ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள்  இதை வாயுக் கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள்.

இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.    கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.

 மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம்.

ஆனால், இதுபோன்ற பிரச்னை, வலி எதுவுமே இல்லாமல்  மாரடைப்பு  ஏற்படுவதும் உண்டு.  இதை 'ஊமை தாக்குதல்என்பார்கள்.