தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஆரம்பம்! மா.செ.க்களுடன் மோதும் ஓ.எம்.ஜி. குரூப்! உடன்பிறப்பு சொல்வதைக் கேட்பாரா ஸ்டாலின்?

ஸ்டாலின் தலைமையில் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.


இந்த வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்று ஓ.எம்.ஜி. குரூப் சொந்தம் கொண்டாடுவதுதான் இப்போது உட்கட்சி பூசலை ஆரம்பித்து வைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஒருவர் மனம் திறந்து பேசினார். ‘‘இன்னைக்கு கட்சி நல்ல நிலையில் இருக்குது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், ஸ்டாலின் முழுக்க முழுக்க ஓ.எம்.ஜி. டீம் சொல்றதைச் செய்றார். அதைப் பார்க்கும்போதுதான் வருத்தமா இருக்கு.

ஏன்னா, கட்சிக்கு பாடுபடுறது முழுக்க முழுக்க மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களும்தான். ஆனா, சபரீசன் தலைமையில் இருக்கிற டீம் ஆட்கள் ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு, ஏரியா நிலவரத்தை கணிக்கிறாங்க. எந்த ஏரியாவுல ஓட்டு அதிகமா விழலையோ, அந்தப் பகுதி நிர்வாகியை மாத்துறதுக்கு பரிந்துரை செய்றாங்க.

குறிப்பிட்ட ஒரு ஏரியாவுல மட்டும் ஏன் ஓட்டு விழலைன்னு மாவட்ட செயலாளருக்கும், அந்தப் பகுதி நிர்வாகிக்கும்தான் தெரியும். ஆளை மாத்திட்டா அங்கே ஓட்டு வாங்க முடியாது. ஆனா, அவங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியலை. ஓ.எம்.ஜி.ல நோட் போட்டுட்டா உடனே தலைமையில கூப்பிட்டு விசாரிக்கிறாங்க. சட்டமன்றத் தேர்தலுக்குள் 5 மாவட்டச் செயலாளர்களை மாத்தணும்னு தகவல் கொடுத்திருக்கிறாங்களாம். அப்படி ஏதாவது நடந்தா, அது கட்சிக்கு நல்லதா இருக்காது.

ஏன்னா, கிட்டத்தட்ட 9 வருஷமா எந்த வருமானமும் இல்லாம கட்சிக்கு நிர்வாகிகள் செலவு செஞ்சிட்டு இருக்காங்க. அதனால, ஸ்டாலின் அமைதியா இருக்கணும். கருணாநிதி போல மாவட்டச் செயலாளர்கள் பேச்சைக் கேட்கணும். அதுதான் கட்சிக்கு நல்லது’’ என்றார். அதுசரி, எப்படி டிரஸ் போடுறது, மேடையில என்ன பேசுறதுங்கிறதை மட்டும் ஓ.எம்.ஜி.யிடம் கேட்டால் போதும் என்கிறார்கள் கட்சியினர்.

உடன்பிறப்புகள் சொல்வதைக் கேட்பாரா ஸ்டாலின்?