காங்கிரஸ் கட்சியை மனவளர்ச்சி குன்றிய கட்சி என மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதற்கு திரைக் கலைஞர் குஷ்பூ சுந்தர் அவர்கள் மன்னிப்பு கோரியிருக்கிறார். இதுகுறித்து மாற்றுத் திறனாளி உரிமை அமைப்புகள் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
குஷ்பு மன்னிப்பை ஏற்கவே மாட்டோம். கோபத்தில் மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள்.
ஆதங்கத்தின் காரணமாகவே சில வாசகங்கள் தவறாக சொல்லி விட்டதாக கூறியிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மாற்றுத்திறனாளிகளை சிறுமைப் படுத்தும் விதத்தில் பேசும் மனப்போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு முன்னதாக மேலும் ஒரு சில தலைவர்களும் இவ்வாறு பேசி உள்ளதாக கூறி அதிலிருந்து குஷ்பூ சுந்தர் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.
தனது மன்னிப்பு அறிக்கையில், மனநலம் மற்றும் மன வளர்ச்சி பாதிப்பு ஆகிய இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது அபத்தமானது. இரு பாதிப்புகளும் வெவ்வேறானவை என்பது கூட அவருக்கு தெரியவில்லை. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் மேலும் கற்க வேண்டி இருக்கிறது என்பதை தான் இது காட்டுகிறது. எனவே அவர் பொதுவாக மன்னிப்பு கோருவதை ஏற்க இயலாது.
எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை அவதூறு செய்யும் இப்படிப்பட்ட பேச்சுக்கள் பிரபலங்களிடம் இருந்து வரக்கூடாது என்பதற்காகவே இந்த மன்னிப்பை நாங்கள் ஏற்கவில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். வழக்குகள் நடக்கட்டும். நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லட்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணியும், பொதுச்செயலாளர் நம்புராஜனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.