அரசின் திட்டத்தை மோப்பம் பிடித்தாரா ஸ்டாலின்..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு.

அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, அரசு ஏதேனும் ஒரு திட்டம் கொண்டுவருவதாக இருந்தால், அதுகுறித்து முன்கூட்டியே வேண்டுகோள் வைப்பது ஸ்டாலினின் வழக்கமாக இருக்கிறது.


அரசு அந்த திட்டத்தை அறிவிப்பு செய்ததும், தன்னுடைய கோரிக்கையால்தான் அந்த திட்டமே அரசு கொண்டுவந்ததாக ஒரு பில்டப் கொடுப்பார் ஸ்டாலின். அப்படியொரு திட்டத்தைத்தான் ஸ்டாலின் இப்போது தெரிவித்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடுமையாக குற்றம் சுமத்தியிருக்கிறார். 

கிராமசபைக் கூட்டம் நடத்தி முடித்துவிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அடுத்தபடியாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் புகார் பெட்டி வைத்து புகார்கள் வாங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில்தான் ஸ்டாலினை அம்பலப்படுத்தியிருக்கிறார் முதல்வர்.

நான் ஏற்கனவே ஒரு திட்டத்தை கொண்டு வரலாம் என்று எண்ணி அதை தொடங்கி நடைபெறுகின்ற வேளையிலே தான் இந்த புகார் பெட்டி வைக்கின்ற திட்டம் மு.க. ஸ்டாலினுக்கு தெரிந்துள்ளது. முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் ஒன்றை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 15-9-2020 அன்று நான் ஏற்கனவே அறிவித்திருக்கின்றேன்.

மனுதாரர் வட்ட அலுவலகத்திற்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கோ தங்கள் வீட்டில் இருந்தபடியே கைபேசி, தொலைபேசி மூலமாகவோ, இணைதளம் வாயிலாகவோ, தபால் மூலமாகவோ, சமூக ஊடகத்தின் மூலமாகவோ தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம். இத்திட்டம் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் ரூ.12.78 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த 22-9-2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இம்மனுக்களை பெற்று பரிசீலனை செய்வதற்கு ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தற்போது அதன் செயலாக்கம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை நான் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கிவைக்க உள்ளேன்.

மக்கள் கோரிக்கைகளை குறைகளை பல்வேறு சிறப்பு திட்டங்களின் மூலமாக உடனுக்குடன் நிறைவேற்றி தீர்த்துவைக்கின்ற அரசு. நான் ஏற்கனவே 110 விதியின் கீழ் அறிவித்து அந்த அறிவிப்பிற்கிணங்க 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது மென்பொருள் தன்மை பரிசோதனை நடைபெற்று வரும் இந்த தருணத்தில், தாங்கள் தான் புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்தது போல் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது விந்தையிலும் விந்தை. இத்திட்டம் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கின்ற விஷயம் எப்படியோ கசிந்து போய் தான் ஸ்டாலின் அவர்கள் புகார் பெட்டியை வைக்க வந்திருக்கின்றார் என்று நேரடித் தாக்குதல் நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.