ஆடிட்டர் குருமூர்த்தியை தாக்கி, சோ குடும்பத்தை அவர் மிரட்டியதாக ஒரு பதிவு நான் எழுதியதாக ’டியூஜே’ சுபாஸ் தன் முக நூலில் போட்டுள்ளார்.
சோ குடும்பத்தை மிரட்டி துக்ளக் பத்திரிகையை எழுதி வாங்கினாரா ஆடிட்டர் குருமூர்த்தி?

நண்பர்களே, குருமூர்த்தி அவர்களின் அரசியலில் மட்டுமல்ல, ஜர்னலிசத்திலும் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. ஆனால்,சோ அவர்களின் குடும்பத்தை மிரட்டியதாக ஒரு பதிவை உரிய தரவுகள் இன்றி நான் எழுதமாட்டேன். சோ மறைவுக்குப் பிறகு, நான் துக்ளக்கில் எழுத வேண்டும் என என் பழைய சகாக்கள் குருமூர்த்தியிடம் கலந்து பேசி,என்னை அழைத்தனர்.
ஆரம்பகாலத்தில் இருந்து துக்ளக்கிற்கு ஒரு பெரும் தூணாகத் திகழும் மதலை அவர்கள் தான் என்னை போனில் அழைத்தார். ‘’சார் நீங்க தயங்க வேண்டாம்! நம்ம சோ சார் இருந்த போது எப்படி நீங்கள் சுதந்திரமாக எழுதினீர்களோ...,அப்படியே எழுதலாம்.அலுவலகம் வாருங்கள்...” என்றார். நண்பர் சத்யாவும் என்னை அன்புடன் வரவேற்று ’’நாங்கள் தான் குருமூர்த்தி சாரிடம் சொன்னோம். சாவித்திரி கண்ணன் மறுபடியும் எழுதினால் நன்றாக இருக்கும் என்றோம்.அவரும், ’உங்கள் விருப்பம்,எனக்கு ஆட்சேபனை இல்லை’ எழுதுங்களேன்...’’ என்றார்.
இரண்டே கட்டுரைகள் எழுதினேன். அத்துடன் அங்கு தொடர்ந்து எழுதுவதில்லை என நானே முடிவு எடுத்துக் கொண்டேன். நான் எந்த பத்திரிகையில் எழுதுகிறேன் என்பதல்ல, என்ன எழுதுகிறேன் என்பது தான் முக்கியம். பரபரப்புக்காகவோ,சுவாரஷ்யத்திற்காகவோ எழுதுபனல்ல நான்.மக்கள் சமூகம் பயனுற என் எழுத்துகள் அமைய வேண்டும் என்பதாக மட்டுமே என் பத்திரிகையுலக பணிகளை வகுத்துக் கொண்டவன் நான்!
அந்த வகையில்,சோ அவர்கள் நான் எழுதிய சுமார் ஒன்பது ஆண்டுகளில் என்னை தன் கருத்துக்கு எதிரான மாற்று கருத்துகளை நான் எழுதும் போது தயங்காமல் பிரசுரித்தார்! என்னை அவர் விரும்பியபடி எழுத வேண்டும் என்றுஒரு போதும் மறைமுகமாகக் கூட நிர்பந்தித்ததில்லை. தான் எப்படி தன் மனதில் பட்டதை எழுதும் ஒரு சுதந்திர பத்திரிகையாளனாக ஆனந்தவிகடனின் நிர்வாகத்தில் துக்ளக் இருந்த போது எழுதினாரோ அதே போல அப்படியே என்னையும் செயல்பட அனுமதித்தார்.
இந்த சுதந்திரத்தை குருமூர்த்தியிடம் எதிர்பார்க்கமுடியாது என தெரிய வந்தவுடன் நானாக எழுத வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.என் பழைய மூத்த சகாக்கள் என்னை நன்றாக புரிந்து கொண்டதால் வற்புறுத்தவில்லை. இதற்குப் பிறகும் நான் சுமார் ஆறு மாதங்கள் துக்ளக் அலுவலகம் சென்று பழைய துக்ளக்குகளை படித்து குறிப்பெடுத்து வந்தேன். அப்போது சோவின் மகன் ஸ்ரீராம்,என்னிடம்,
’’ நீங்களெல்லாம் எழுதினால் நன்றாக இருக்குமே’’ என்றார். ’’இல்லை’ சோ குறித்து ஒரு புத்தகம் எழுதவே துக்ளக் இதழ்களை குறிப்பெடுக்கிறேன். ஏனெனில், வெவ்வேறு காலகட்டங்களில் அவரது அரசியல் நிலைபாடு என்ன என்பதை அறிந்து எழுதத்தான் என்றேன். ’’அப்படியானால், அதை துக்ளக்கிலேயே எழுதுங்கள்’’ என்றார் திருமதி ஸ்ரீராம். நான் முழுவதுமாக எழுதிவிட்ட பிறகு சொல்கிறேன் என்று தவிர்த்தேன்.
துக்ளக்கில் நான் பணியாற்றிய காலங்களில் ஸ்ரீராமுடன் நான் பல மணி நேரங்களை செலவழித்துள்ளேன். அவருக்கு அப்போது அரசியலிலும்,சரி,தன் அப்பாவின் எழுத்துகளிலும் சரி ஆர்வமில்லை. அறிவியல்,தொழில் நுட்பம் மற்றும் கடுமையான உடற்பயிற்சி குறித்த அக்கரையைத் தான் அவரிடம் கண்டேன். மிகவும் தைரியசாலி!
தற்போது துக்ளக்கில் உள்ள சூழல்களை வைத்து பார்த்த போது அவருக்கு குருமூர்த்தியின் தீவிர இந்துத்துவ ஆதரவு எழுத்துகளில் உடன்பாடு இல்லை என்பது மட்டும் தெரிய வந்தது. அதனால் தான் குருமூர்த்தி அவர்கள் தலையங்கம்,கேள்வி,பதில் எழுதுவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என அறிய வந்தேன்.
அதிலும் கடுமை வெளிப்படும் பட்சத்தில் அதை நீக்கி பிரசுரிக்கும் அளவுக்கு அவருக்கும்,குருமூர்த்தி அவர்களுக்கும் பரஸ்பர புரிதல் உள்ளது என்பதும் தெரிய வந்தது. இப்படியிருக்க, ஸ்ரீராம் அவர்களையோ,சோவின் குடும்பத்தையோ யாரும் மிரட்டமுடியும் என நான் நம்பவில்லை!
நன்றி: சாவித்திரி கண்ணன்