தம்பி அங்க போய் நில்லு! களத்தில் வங்கதேசத்துக்கு பீல்டிங் செட் செய்த 'தல'!

வங்காளதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.


ஆனால் இந்த போட்டியில் தோனி வங்காளதேச அணிக்கு  ஃபீல்டிங் செட் செய்தது தான் இப்போது சமூக வலை தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது. வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் லோகேஷ் ராகுல் மற்றும் தோனி அபாரமாக ஆடி சதமடித்தனர். குறிப்பாக தோனி 78 பந்துகளில் 113 ரன்களை குவித்தார். 

பொதுவாக இந்திய அணியில் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டாலும், போட்டி இக்கட்டான நிலையில் செல்லும் போது தோனி  தான் கேப்டன் போல பீல்டிங் செட் செய்வார். ஆனால் வங்காளதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் தோனி, எதிரணிக்கு  பீல்டிங் செட் செய்த சம்பவம் செம வைரலாகி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய  அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது வங்காளதேச அணியை சேர்ந்த சபிர் ரஹ்மான் 40வது ஓவரை வீசினார். அப்போது தோனி, பந்து வீச வந்த சபிர் ரஹ்மானை பாதியிலே நிறுத்தி,  Mid Wicket பகுதியில் தவறான இடத்தில்  நின்று கொண்டிருந்த பீல்டரை சுட்டிக்காட்டி, சபிர் ரஹ்மானிடம் அதை மாற்றுமாறு செய்கைக்காட்டினார்.

அதை உணர்ந்த சபிர் ரஹ்மான், வங்காளதேச கேப்டன் மோர்டசாவிடம் கூட எந்த கருத்தும் கேட்காமல்,  தோனியின் அறிவுரைப்படியே அந்த பீல்டரை சரியான இடத்திற்கு மாற்றி நிற்கவைத்தார்.  இந்த சம்பவத்தால் எதிரணிக்கே பீல்டிங் நிற்க வைத்த ஒரே வீரர் தோனி மட்டும் தான் என்று பல்வேறு தரப்பினரும்  சமூகவலைதளங்களில் தங்களின் கருத்துக்களை ஷேர் செய்து  வருகின்றனர்.