சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி: ரஸ்ஸலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரபாடா!

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பரபரப்பான வெற்றியை அடைந்தது.


முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருந்தது. இந்த நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் அண்ட்ரெ ரஸ்ஸல் தொடக்கத்தில் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. பின்னர் சிறிது நேரத்திற்கு பின்பு அண்ட்ரெ ரஸ்ஸல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி ருத்ர தாண்டவம் ஆடினார்.அண்ட்ரெ ரஸ்ஸல் 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக் 50 ரன்களை சேர்த்தார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது.டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தவான் 16 ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ப்ரித்வி ஷா வுடன் இணைந்து அதிரடியாக விளையாடினர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது  இந்த ஜோடி. சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களுக்கு  வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா 99 ரன்களுக்கு அவுட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை அடைய டெல்லி கேபிட்டல்ஸ் அணி திணறியது. குல்தீப் யாதவ் காய்ச்சி ஓவரை வீச அந்த ஒவரின் 5வது பந்தில் ஹனுமான் விஹாரி அவுட் ஆனார். இந்நிலையில் 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிராம் கடைசி பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தில் 2வது ரன் ஓட முயற்சிக்கும் போது ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் ட்ராவில் முடிந்து பரபரப்பான சூப்பர் ஓவருக்கு சென்றது.

 சூப்பர் ஓவர் :

 சூப்பர் ஓவரில் களமிறங்கிய டெல்லி அணி 10 ரன்களை சேர்த்தது. அந்த அணிக்காக ரிஷாப் பாண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினர். ஷ்ரேயஸ் ஐயர் 3வது பந்தில் அவுட் ஆக, ப்ரித்வி ஷா அடுத்த பேட்ஸ்மேனாக களமிறங்கினார் .

11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரஸ்ஸல் ஓவரின் 3வது பந்தில் ரபாடா விடம் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய ராபின் உத்தப்பா கேப்டன் தினேஷ் கார்த்திக் வுடன் இனைந்து ஆடினார்.   ரபாடா சிறப்பாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியால் 7 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சூப்பர் ஓவரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பரபரப்பான வெற்றியை அடைந்தது.