ரஜினியின் தர்பார்..! படம் எப்படி இருக்கு? ஒரு நேர்மையான விமர்சனம் - ரிவ்யூ!!!

பொங்கல் விருந்தாக நடிகர் ரஜினி நடித்து வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு படம் எப்படி இருக்கிறது என்பது தான் இந்த விமர்சனம்.


திடீரென வெறி பிடித்தவர் போல மும்பையில் உள்ள ரவுடிகளை எல்லாம் சுட்டுக் கொலை செய்கிறார் ஆதித்யா அருணாசலம் எனும் மாநகர காவல் ஆணையர். இதனால் மனித உரிமைகள் மூலமாக பிரச்சனை வர அதனை துப்பாக்கி முனையில் சரி செய்துவிட்டு தனது அடுத்த வேலையை பார்க்கச் செல்கிறார் ஆதித்யா. எப்படி இருந்த ஆதித்யா அருணாசலம் திடீரென ஏன் இப்படி மாறினார் என மனித உரிமைகள் ஆணையத்தில் இருக்கும் அதிகாரிக்கு சந்தேகம் வருகிறது.

உடனடியாக ஒரு பிளாஸ்பேக். டெல்லியில் நேர்மையான - தீரமான காவல்துறை அதிகாரியாக இருக்கும் ஆதித்யா அருணாசலத்தை மும்பைக்கு செல்லுமாறு கூறுகிறார் உள்துறை அமைச்சர். மும்பை மாநகரம் முழுவதும் போதைப் பொருள் மற்றும் விபச்சாரத்தால் சீரழிந்து வருவதாகவும், இதனால் போலீசுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் கூறுகிறார்.

அதோடு மட்டும் அல்லாமல் சுமார் 27 வருடங்களுக்கு முன்னர் ஹரி சோப்ரா எனும் டான், சுமார் 18 போலீசாரை உயிரோடு கொளுத்தியதால் மும்பையில் போலீசில் சேர தகுதியான ஆளே இல்லை என்பதால் ஆதித்யாவை மும்பைக்கு அனுப்புகிறார் அமைச்சர். மும்பையில் சென்று இறங்கியதும் துணை முதலமைச்சரின் மகள் கடத்தப்படுகிறார்.

இந்த கடத்தை மையாமக வைத்து ஒரே நாளில் போதைப் பொருள் கும்பலை பிடித்து விடுகிறார் ஆதித்யா. சும்மா விடுவார்களா போதைப் பொருள் ஆசாமிகள். இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. மும்பைக்கு போதைப் பொருள் சப்ளை செய்யும் மல்ஹோத்ராவின் மகனை அவரை வைத்தே போட்டுத் தள்ளுகிறார் ஆதித்யா.

அடுத்த சில மணி நேரங்களில் ஆதித்யா அருணாசலத்தின் மகள் கொல்லப்படுகிறார். தனது மகள் கொல்லப்பட்டதற்கு மல்ஹோத்ரா தான் காரணம் என ரஜினி நினைத்துக் கொண்டிருக்க, ஆனால் அந்த மல்ஹோத்ராவும் அதற்கு முன்னதாகவே கொலை செய்யப்பட்டு விடுகிறார். இதனால் தனது மகளை கொலை செய்தது யார் என தெரியாமல் ரஜினி தவிக்கிறார்.

தனது மகளை கொன்றது யார், ஏன் என்று ஆதித்யா அருணாச்சலமாக நடித்துள்ள ரஜினி எப்படி கண்டுபிடிக்கிறார். பிறகு அவனை எப்படி அழிக்கிறார் என்பது தான் மீதிக் கதை. சாதாரண கதையாக இருந்தாலும் திரைக்கதை மூலம் படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது. படத்தின் துவக்கம் முதல் இடைவேளை வரை காட்சிகள் விறுவிறு என பறக்கிறது. அதிலும் ரஜினி - யோகி பாபு இடையிலான காட்சிகள் செம தூள்.

தனது புத்திசாலித்தனத்தால் ரஜினி ஒரே நாளில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கூண்டோடு அழிப்பது ரசிக்கும்படி உள்ளது. இவ்வளவு ரிஸ்கான வேலையில் இருக்கும் ரஜினிக்கு எப்படியவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அவரது ஒரே மகள் நிவேதா தாமஸ் ஆசைப்படுகிறார். அப்போது அவர்கள் எதிரே நயன்தாரா வர ரஜினிக்கு காதல் பத்திக்கிறது.

நயன்தாராவை பிக்கப் பண்ண ரஜினி செய்யும் சேட்டைகள் அனைத்தும் ரசிக்க வைத்துள்ளது. சும்மா கிழி பாடல் முதல் நயன்தாராவுக்காக ரஜினி புறப்படும் பாடல் வரை அனைத்தும செம எனர்ஜி. மகளாக நடித்துள்ள நிவேதா, உதவியாளர் யோகி பாபுவுடன் இணைந்து ரஜினி செம கலாட்டா செய்துள்ளார். ரஜினி ஸ்க்ரீனில் இருக்கும் போதெல்லாம் விறுவிறுப்பாக செல்கிறது.

அதிலும் ரஜினியின் மகளாக நிவேதா பின்னி பெடல் எடுத்துள்ளார். சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ் கூட ரசிக்க வைக்கிறது. இதே போல் யோகி பாபுவுடன் சேர்ந்து அவர் அடிக்கும் காமெடிகளும் நன்றாகத்தான் உள்ளது. எந்த ஒரு காட்சியும் போர் அடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். படத்தில் நயன்தாரா கதநாயாகியா கேரக்டர் ஆர்டிஸ்டா என்கிற சந்தேகம் வருகிறது.

மொத்தமாகவே ஒரு நான்கைந்து சீன் தான். ஒரு சீனில் முதுகை காட்டுகிறார். பிறகு ஒரு பாடலுக்கு சிறிது ஆட்டம் போடுகிறார். அத்தோடு அவரது சீன் முடிந்துவிடுகிறது. படம் முழுக்க முழுக்க ரஜினி படம். திரைக்கதை ஸ்பீடு, பட வேகமான பின்னணி இசை இணைந்து படத்தை தூக்கி நிறுத்துகிறது. சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.

அதிலும் திருநங்கைகள் பாடல் பாட தனது மகளை காப்பாற்ற ரஜினி ரயில் நிலையத்தில் போடும் சண்டை காட்சியில் திரையரங்கே அதிர்கிறது. ரஜினி ஸ்டைலாக நடக்கும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதை அள்ளுகிறது. படத்தில் ஏராளமான மாஸ் சீன்கள் இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். சும்மா கிழி பாடல், தலைவா பாடலும் படத்திற்கு செம பக்க பலம்.

பழைய கதை,  யூகிக்க கூடிய காட்சிகள், லாஜிக் மிஸ்ஸிங் என ஏராளமான மைனஸ்கள் இருந்தாலும் ரஜினி இருப்பதால் அதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. நயன்தாராவின் சகோதரராக நடித்திருக்கும் ஸ்ரீமன் ரஜினி வீடு தேடி வந்து கூறும் வார்த்தைகளுக்கு ரஜினி கொடுக்கும் அந்த ரியாக்சன் தாய்மார்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மொத்தத்தில் மீண்டும் ஒரு 80களில் 90களில் வந்த ரஜினி படத்தை கொடுத்துள்ளார் முருகதாஸ். குடும்பத்தோடு சென்று பார்த்து என்ஜாய் செய்யலாம்.