5 ஸ்டார் ஹோட்டலில் ராஜவிருந்து! இளைஞர் அணி நிர்வாகிகளை திக்குமுக்காடச் செய்யும் உதயநிதி!

திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற போவதாக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெற்றது. வெற்றிக்கு பாடுபட்டவர்களுள் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். அனைத்து தொகுதிகளிலும் சென்று கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிரடி பிரச்சாரம் செய்தார்.

வெற்றி பெற்றவுடன், உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்க கட்சிக்குள் சிபாரிசுகள் நடந்து வந்தன. அதற்கேற்றவாறு சென்ற மாதம் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். பதவியேற்ற முதல் வாரத்திலேயே இளைஞரணி மாவட்ட செயலாளர் கூட்டத்தைத் அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் கூட்டினார். நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை முதன்மைப்படுத்திய தேர்தல் பிரச்சாரம் ஏற்பட்டது. அதற்கேற்றவாறு திராவிட முன்னேற்றக் கழகம் வேலூர் கோட்டையைக் கைப்பற்றியது.

புதுவேகம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட,மாநில,மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டமானது வருகிற 25-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு தாயகம் கவி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜோயல், துரை, ஆர்.டி. சேகர், அசன் முகமது அலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகிப்பர். கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று அறிக்கை விடுத்திருந்தார். 

இந்த அறிவிப்பானது திமுக இளைஞரணி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.