கொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்! ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடுகிறார்..!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவிற்காக திமுக சார்பில் செய்ய வேண்டிய நலத்திட்டங்கள் பற்றி மாவட்ட நிர்வாகிகளிடம் ஜெ அன்பழகன் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். 

இந்நிலையில் ஜெ அன்பழகன் அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரது ஏற்பாட்டின் பேரில் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடனடியாக குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்து மருத்துவர்கள் கொரோனோ பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெ அன்பழகன் அவர்களுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக உடலில் வேறு சில பிரச்சனைகளும் இருந்து வந்துள்ளன. தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் ஜெ. அன்பழகன் அவர்களுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.